2023-ஆம் ஆண்டு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு...!

2023-ஆம் ஆண்டு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு...!

2023 -ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி  முர்மு வழங்கினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் பழங்குடியின பாம்பு பிடி வீரர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார். 

சமீபத்தில் 2023 ஆண்டுக்கான பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் உசேன், முன்னாள் மத்திய அமைச்சர்  எஸ் எம் கிருஷ்ணா, தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா,  மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதுகளை வழங்கினார். 

இதையும் படிக்க : சட்டப்பேரவையில் நாளை மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா தாக்கல்...!

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் வடிவேல் கோபால் , மாசி சடையன் ஆகியோருக்கு சமூக சேவைப் பிரிவில் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கினார். இதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் பிள்ளைக்கு கலைப் பிரிவிலும், சமூக சேவைப் பிரிவில் மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கும், பாலம் கல்யாணசுந்தரத்திற்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கினார். புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கும் பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.