சட்டப்பேரவையில் நாளை மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா தாக்கல்...!

சட்டப்பேரவையில் நாளை மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா தாக்கல்...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை வியாழக் கிழமையன்று சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்கிறார். 

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் பொருளாதார இழப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டதை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதி அரசன் சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி அவசரச் சட்டமானது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அன்றைய தினமே ஆளுநரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நிரந்தர சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிக்க : பட்டாசு ஆலைகளுக்கென தனி விதிகளை வகுக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஆளுநர் தரப்பில் சட்ட மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது, அதற்கு தமிழ்நாடு அரசும் மறுநாளே விளக்கம் அளித்திருந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்று விளக்கம் அளித்து சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை நாளை மீண்டும் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அரசு அளித்த விளக்கங்களையும் பேரவையில் விரிவாக விளக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.