இந்தியாவை நோக்கி திரும்பும் உலக நாடுகளின் பார்வை.....

இந்தியாவை நோக்கி திரும்பும் உலக நாடுகளின் பார்வை.....

இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை இயக்கும் சக்தியாக இந்தியாவின் இளைஞர் சக்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

அணிவகுப்பு:

டெல்லியில் உள்ள கரியப்பா தேசிய மாணவர் படை  மைதானத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய மாணவர் படையின் அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்.  இந்த அணிவகுப்பில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த தேசிய மாணவர் படையைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

வெளியிடப்பட்ட நாணயம்:

அணிவகுப்புக்குப் பின் தேசிய மாணவர் படையின் 75 ஆண்டைக் குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். 

கட்டமைக்கும் பணியில்:

தொடர்ந்து மாணவர் படையினரிடையே உரையாற்றிய பிரதமர், தேசிய மாணவர் படையின் 75 ஆண்டுகால பயணத்தில், இந்த படையில் இடம்பெற்று நாட்டைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டுவதாகக் கூறினார்.  

உலக நாடுகளின் பார்வை:

இந்தியாவில் உள்ள  இளைஞர்களின் எண்ணிக்கையால்  உலக நாடுகளின் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளதாகக் கூறினார்.  கடந்த எட்டு ஆண்டுகளில் காவல் துறை மற்றும் துணை ராணுவங்களில் இடம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறினார்.  மேலும், முப்படைகளிலும் பெண்களின் பங்களிப்பையும் நாம் காணமுடிவதாக பெருமிதம் கொண்டார். 

பிற நாடுகளை சேர்ந்த..:

இந்த அணி வகுப்பில் பிரேசில், அர்ஜெண்டினா, பிஜி, கஜகஸ்தான் உள்ளிட்ட 196 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் மாணவர்களும் பங்கேற்றனர்.  ஆயிரத்து 445 ஆண்கள் மற்றும்  710 பெண்கள் என இரண்டாயிரத்து 155 தேசிய மாணவர் படையினர் பங்கேற்றுள்ளனர்.  இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய மாணவர் படை தலைவர் லெஃப்டினண்ட் ஜென்ரல் குர்பிர்பால் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதில் தேசிய மாணவர்  படையினரின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  புறக்கணித்த இடத்திலேயே பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்திய வரலாறு.....