மூன்றாவது முறையாக முதலமைச்சரான கருணாநிதி....புறக்கணித்த இடத்திலேயே பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்திய வரலாறு.....

ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசியலில் முக்கிய மாற்றங்கள் நிறைய ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஆட்சி மாற்றம், குடியரசு தலைவர் ஆட்சி அமல் என பல நிகழ்வுகளை கூறலாம். அந்த வகையில் ஜனவரி 27ல் தி முக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி 3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
அதி முக பனிப்போர்:
எம்.ஜி.ஆர் மறைவுவிற்கு பிறகு அதி முகவில் பனிப்போர் நிலவிய நிலையில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற நிலையில் ஏற்பட்ட போது, அண்ணா மறைந்த போது தற்காலிக முதலமைச்சராக இருந்த அதே நாவலர் நெடுஞ்செழியன் இடைக்கால முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆர். எம். வீரப்பன் உள்ளிட்டோரின் முயற்சியால் எம்ஜியாரின் மனைவி ஜானகியை முதலமைச்சராக்கினர். இதனையடுத்து அதி முக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. அதனை தொடர்ந்து ஜானகி தலைமையிலான ஆட்சி ஆட்சி கலைக்கப்பட்டு ஜனவரி 30 1988 ல் குடியரசு தலைவர் ஆட்சி தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது. பின் ஒரு ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.
நான்கு முனைப் போட்டி:
மருங்காபுரி மற்றும் மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 1967ல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தனித்து களம் கண்டது. 14 முறை தமிழ்நாட்டிற்கு பிரச்சாரம் மேற்கொண்டர் என்பது குறிப்பிடதக்கது. தி. மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், முஸ்லீம் லீக் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி இடம்பெற்றிருந்தது. அதி முக ஜானகி அணிக்கு திராவிடர் கழகம் ஆதரவளித்தது மேலும் நடிகர் சிவாஜி கணேசனின் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் ஆதரவளித்தது. அதி முக ஜெயலலிதா அணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவளித்தது.
வாய்ப்பை பயன்படுத்திய தி. மு.க.:
13ஆண்டுகளாக ஆட்சியைக் கைப்பற்ற இயலாத கருணாநிதி தலைமையிலான தி. மு.க. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தயாரானது. அந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்த கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்தது
தி. மு.கவின் வாக்குறுதிகள்:
தமிழ்நாடு மக்களின் கோரிக்கையாக இருக்கும் மாநில சுயாட்சியோடு கூடிய முழுமையான கூட்டாட்சி முறை என்பதை முதல் தேர்தல் வாக்குறுதியாக அளித்தது தி. மு.க. இந்தி திணிப்புக்கு எதிராக எத்தகைய தியாகங்களையும் செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தது. மத்திய அரசிலும் அதன் நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக வேலை வாய்ப்புகளில் தனி ஒதுக்கீடு தர வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவோம் என வாக்குறுதியும் அளித்தது.
வெற்றியை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு சரியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியது. 232 தொகுதிகளில் 198 இடங்களில் தி முக களமிறங்கியது. கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 21 இடங்களையும் ஜனதா தளத்துக்கு 10 இடங்களையும் இந்திய யூனியன் லீக்குக்கு 3 இடங்களையும் ஒதுக்கியது.
ஜெயலலிதா அணி:-
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில் தேர்தலை சந்திக்க தயாரானது. அஇஅதி முகவின் ஜெயலலிதா அணி 196 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் 12 இடங்களிலும் போட்டியிட்டன.
ஜானகி அணி:
ஜானகியின் அஇஅதி முக அணிக்கு இரட்டை புறா சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜானகியின் அணி 175 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான தமிழக முன்னேற்ற அணி 45 இடங்களிலும் போட்டியிட்டன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஜானகிக்கு ஆதரவாக களம் இறங்கினார்.
மாத்தி யோசித்த காங்கிரஸ்:
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மேலும் ஓராண்டுக்கு குடியரசு ஆட்சியை நீட்டித்ததோடு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. சென்னை மறைமலை நகரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி கருப்பையா மூப்பனாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது. இறுதியில் தி. மு.க கூட்டணி 175 தொகுதிகளையும், காங்கிரஸ் 26 இடங்களிலும், ஜானகி அணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதி முகவின் ஜெயலலிதா அணி 27 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
பதவியேற்பு விழா:
1973 ஆம் ஆண்டு தி முக ஆட்சிக் காலத்தில் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது இறுதியில் திறப்பு விழாவிற்கான தேதியும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் தி முக ஆட்சி கலைக்கப்பட்டு நெருக்கடி நிலை அமலுக்கு வந்தது. பின் அன்றைய குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. அவ்விழாவிற்கு தி முக தலைவரான கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கவில்லை. 1989 ல் முதலமைச்சராக பதவியேற்க மு.கருணாநிதி தேர்வு செய்த இடம் அன்று அவர் புறக்கணிக்கப்பட்ட அதே இடம்தான் வள்ளுவர் கோட்டம்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: மோதலுக்கு தயாராக இருப்பவரா முதலமைச்சர்.... முரசொலியின் விளக்கம் என்ன?!!