மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ராகுல் காந்தி, எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரை கொண்டுள்ளனர் என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு பிரதமர் மோடி மற்றும் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக, குஜராத் மாநிலம் சூரத் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி குற்றவாளி என்று கூறி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. தொடர்ந்து, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடையும் விதித்தது.
இந்நிலையில், மார்ச் 23 ஆம் தேதியிலிருந்து ராகுல் காந்தி மக்களை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.