மின்துறையை தனியாராக்குவதற்கு துடிக்கும் அரசு...ஆனால் எதிர்க்கும் ஊழியர்கள்...இடையில் பாதிக்கும் மக்கள்!

மின்துறையை தனியாராக்குவதற்கு துடிக்கும் அரசு...ஆனால் எதிர்க்கும் ஊழியர்கள்...இடையில் பாதிக்கும் மக்கள்!
Published on
Updated on
1 min read

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்:

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை திரும்பப்பெறக்கோரி நேற்று முதல் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மின்விநியோகம் பாதிப்பு:

இந்த காலவரையற்ற போராட்டத்தால், புதுச்சேரி கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலை, காலப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஆலோசனையில் முதலமைச்சர்:

இதனிடையே புதுச்சேரியில் மின் துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக துணை நிலை ஆளுநர் தமிழிசையை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான மின் விநியோகம் தடைபட்டால் அதை எவ்வாறு சமாளிப்பது குறித்தும், மின் துறை ஊழியர்களின் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் 35 நிமிடங்கள் ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை, அரசு நல்ல முடிவை எடுக்கும் எனவும், பொதுமக்களை பாதிக்கும் வகையில் சுயநலத்துடன் மின் துறை ஊழியர்கள் போராட வேண்டாம் எனவும் தமிழிசை வேண்டுகோள் விடுத்தார்.

 -
 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com