”ஓசி பேருந்து பயணம்” சொன்ன அமைச்சர்...இப்ப அப்படியே பிளேட்ட மாத்திட்டாரு...!

”ஓசி பேருந்து பயணம்” சொன்ன அமைச்சர்...இப்ப அப்படியே பிளேட்ட மாத்திட்டாரு...!
Published on
Updated on
2 min read

”ஓசி பேருந்தில் தானே பயணம் செய்கிறீர்கள்” என்று பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்திருக்கிறார். 

மகளிருக்கான இலவச பேருந்து பயணம்:

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற திமுக அரசு மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயணம் என்ற வாக்குறுதியை அளித்திருந்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை நிறைவேற்றியது. இந்த திட்டம் மூலம் பல்லாயிர கணக்கான பெண்கள் இலவச பேருந்து பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்தனர். 

பேருந்துகளில் பேசப்படும் திட்டம்:

மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயணம் என்ற திட்டம் வந்ததையடுத்து, பேருந்தில் நடத்துனர்கள் ஓசி பஸ்ஸில் தான் வருகிறீர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி பெண்களை , ஆங்காங்கே நீங்கள் வருவதே இலவச பேருந்து என்றெல்லாம் பேசுவது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக பெண்களிடையே குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

ஓசி பஸ் என்று கூறிய அமைச்சர் பொன்முடி:

இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “இப்போது பேருந்தில் எப்படிச் செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலோ, வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில்தானே போகிறீர்கள்" என்று மகளிருக்கான இலவச பேருந்துப் பயணத்தை குறிப்பிட்டு பேசினார். அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை, அவர்களே இப்படி ”ஓசி பஸ்” என்று விமர்சிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், அமைச்சர் பொன்முடி பேசியது அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல், மக்களிடையும் சர்ச்சையானது.

மூதாட்டியின் சர்ச்சை வீடியோ:

இந்த சர்ச்சைக்கிடையே, நேற்று ஒரு மூதாட்டியின் வீடியோ வைரலானது. அந்த வீடியோவில்,  " ஓசி பயணம் வேண்டாம், டிக்கெட் கொடுங்க" என்று  நடத்துனரிடம் மூதாட்டி முரண்டு பிடித்தது மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. இலவச பயணம் குறித்து அமைச்சர் பேசியது தான் இதற்கு காரணம் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

பொன்முடி ஆய்வு:

இந்நிலையில், சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்வானவர்களை இந்த கல்வி ஆண்டிலேயே கலை அறிவியல் கல்லூரியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

சர்ச்சைக்கு விளக்கமளித்த அமைச்சர்:

தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் ஓசியில் பேருந்தில் பயணம் செய்வதாக   விளையாட்டாகப் பேசியதை இவ்வளவு பெரியதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார். மகளிருக்கான இலவச பேருந்துப் பயணத்தை 'ஓசி பஸ்' என்று கூறியது சர்ச்சையான நிலையில், விளையாட்டாகப் பேசியதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com