அவதூறு வழக்கு விசாரணையில் சரணடைந்ததை அடுத்து சினிமா இயக்குனர் ஆர். கே.செல்வமணிக்கு எதிராக பிறப்பித்த பிடி வாரண்ட்டை திரும்பப் பெற்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் ஆர். கே.செல்வமணி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார் அதில் பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து செல்வமணி மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார்.
போத்ரா இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு 15 வது மாஜிஸ்திரேட்டு முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆர். கே.செல்வமணி நேரில் ஆஜராக வில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறபித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து ஜார்ஜ் டவுன் 15 வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற நீதிபதி சுமதி முன்பு இன்று ஆர். கே. செல்வமணி நேரில் ஆஜரானார். அப்போது செல்வமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நர்மதா சம்பத், நீதிமன்றம் பிறப்பித்த பிடி வாரண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார்.
இதனை ஏற்ற நீதிபதி பிடி வாரண்ட் உத்தரவை திரும்ப பெற்று உத்தரவிட்டு விசாரணை நவம்பர் 3 தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிக்க: "ரயில் இயக்கத்தை தடுத்தால் 4 ஆண்டு சிறை" மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை!
கொடைக்கானல் மோயர் சதுக்கம் பகுதியில் 3 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இன்று முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா இடங்கள் இருந்து வருகிறது. இங்கு பிரதான சுற்றுலா பகுதிகளாக இருக்கும் மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மர காடுகள், தூண்பாறை என பல்வேறு இடங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக மோயர் சதுக்கம் பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள கடைகளை சேதப்படுத்தி வந்தது.
தொடர்ந்து, இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறை மூலம் தடை விதிக்கப்பட்டு இருந்தது . யானையை கண்காணித்து விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர் . யானை அடர்ந்த வனப் பகுதிக்குள் இடம் பெயர்ந்ததை அடுத்து கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு மீண்டும் இன்று முதல் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வனத்துறையானது அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பேரிஜம் ஏரிக்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க தடையானது நீடித்து வருகிறது.
இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.8 கோடி மதிப்பிலான தங்கப்பசை பறிமுதல்!
தனக்கு வந்த புகழையும், பாராட்டுக்களையும் பிறருக்கு விட்டுக் கொடுக்கும் மனம் பலருக்கும் இருப்பதில்லை. ஆனால் தமிழ்நாடே, ஏன்? இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான புகழை விட்டுக் கொடுத்ததுதான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டது ஜெயிலர் திரைப்படம். இந்த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய தயாரிப்பாளர் கலாநிதிமாறன், படக்குழுவினரை பரிசு மழையால் நனைய வைத்தார்.
ரஜினிகாந்துக்கு ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7, இயக்குநர் நெல்சனுக்கு ஒரு கோடியே 44 லட்சம் மதிப்புள்ள போர்ஸ்சே, இசையமைப்பாளர் அனிருத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஸ்சே என ஆடம்பரக் கார்களை பரிசுகளாக வழங்கினார். மேலும் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்கக்கும் தங்க நாணயம் பரிசு வழங்கிய நிலையில் இதன் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், ஜெயிலர் படம் எடுக்கப்பட்ட போது இசையில்லாமல் பார்த்த போது சுமாராக இருந்ததாகவும் அதனை அனிருத் தன் இசையால் மேஜிக் செய்து விட்டார் என்றும், பின்னணி இசையின் மூலம் படத்தை எங்கேயோ தூக்கி கொண்டு போய் விட்டார் என்றும் பேசினார்.
தான் நடித்த படத்தை சுமார் என கூறுவது தன்னடக்கம்தான் என்றாலும், படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குநர் நெல்சன் ரஜினி கண்ணுக்கு தெரியாமல் போய் விட்டாரோ? ரத்த சொந்தம் அனிருத்துக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்வது ஏன்? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஜவான் வெற்றி அனிருத்திற்கு இந்தியில் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கி உள்ள சூழலிலும், ரஜினியின் இந்த பேச்சு அனிருத்தை இந்தியில் முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சியா என்ற கேள்விகளையும் கேட்கின்றனர் வலைதளவாசிகள்.
இதையும் படிக்க || காவிரி விவகாரம்: பிரதமரை சந்திக்கவிருக்கும் கர்நாடக குழு!!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு,செலுத்தியது.
அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன, சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி P.T.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை, அதேசமயம், நான்கு வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்த்தின் விவரங்களின் ஆவணங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யாததால் நடிகர் விஷால் வரும் 22ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் பிற்பகலில் நடிகர் விஷால் தரப்பு வழக்கறிஞர், விஷால் நேரில் ஆஜராக விளக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நடிகர் விஷால் வரும் செப்டம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதையும் படிக்க || "மசோதாவிற்கு ஒத்துழைக்க வேண்டும்"- வானதி சீனிவாசன்... "நாரி சக்தி கேலிக்கூத்து" - ப.சிதம்பரம்!!!
சூப்பர் சிங்கரில் மாமன்னன் பாடலை பாடி கலக்கிய இளம் பாடகி ஹர்ஷினி நேத்ராவை, கட்டியணைத்துப் மாரி செல்வராஜ் பாராட்டினார்.
தமிழில் இசை உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வார நிகழ்ச்சியில் நெகிழ்வான தருணமாக, இளம் பாடகி ஹர்ஷினி நேத்ராவை, நேரில் பாராட்டி மகிழ்ந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
சாதி மறுப்பு திருமண தம்பதியின் மகள் ஹர்ஷினி நேத்ரா, எளிமையான குடும்பத்தைச்சேர்ந்த சிறுமி ஆவார். விழுப்புரம் நகரைச் சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது. சமூகத்தில் பல இன்னல்களைத் தாண்டி, பல புறக்கணிப்புகளைத் தாண்டி, தங்கள் மகள் ஹர்ஷினி நேத்ராவை இசையில் ஊக்கப்படுத்தி வருகின்றனர் அந்த தம்பதி.
தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா அனைவரையும் கவர்ந்து வருகிறார். முன்னதாக மிமிக்ரி குரலில் பாடி ஆச்சரியப்படுத்தினார். தன் வாழ்வின் வலியைச் சொல்லும் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடி நடுவர்களைப் பிரமிக்க வைத்தார். முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன், பரியேறும் பெருமாள் படங்களிலிருந்து பாடல்களைப் பாடி அசத்தினார்.
இதையும் படிக்க : 'காற்றில் பறந்த கல்விக் கடன் ரத்து' குற்றம்சாட்டும் எடப்பாடி!
ஹர்ஷினி நேத்ரா பாடிய பாடல்களின் வீடியோவை நடுவர் ஆண்டனி தாசன் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு அனுப்பியிருந்தார். ஹர்ஷினி நேத்ராவின் பாடல்களில் ஈர்க்கப்பட்ட மாரி செல்வராஜ் இந்த வார நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக கலந்துகொண்டார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் டெடிகேசன் ரவுண்ட் நடைபெற்றது. இந்த ரவுண்டில் பாடகர்கள் தங்களுக்குப் பிடித்த எவருக்கு வேண்டுமானாலும் பாடல்களை டெடிகேட் செய்து பாடலாம். இந்த நிகழ்ச்சியில் தனது பெற்றோருக்கு டெடிகேட் செய்து, மாமன்னன் படத்திலிருந்து நடிகர் வடிவேலு பாடிய தன்தானத்தானா பாடலை பாடினார். ஹர்ஷினியின் பாடலை மேடையின் பின்னாலிருந்து மாரி செல்வராஜ் டிவியில் பார்த்தார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் நிகழ்ச்சிக்கு வந்திருப்பது, நடுவர்கள் உட்பட எவருக்கும் தெரியாது. ஹர்ஷினி நேத்ரா பாடி முடித்தவுடன் சர்ப்ரைஸாக மேடையேறிய இயக்குநர் மாரி செல்வராஜ் அவரை கட்டியணைத்துப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது, ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது, நம் கருத்து அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று தான் உருவாக்குகிறோம், உண்மையில் இன்றைய தலைமுறை அதைப் புரிந்து கொள்வதை நேரில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த குடும்பம் என்ன வலி அனுபவித்திருக்கும், இந்த குழந்தை என்ன மனநிலையில் இருப்பாள் என்பது எனக்குத் தெரியும், நானும் மேடைக்காக ஏங்கியவன் இன்று இந்த குழந்தை தன் உழைப்பில், இந்த மேடையைப் பெற்றிருக்கிறாள் என்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. யாருக்கும் பயப்படாமல், எந்த தடை வந்தாலும் கவலைப்படாமல் முன்னேறிப்போக வேண்டும் என ஹர்ஷினிக்கு வாழ்த்து தெரிவித்தார்.