தமிழ்நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!

கடலூர், திருவண்ணாமலை, தஞ்சை என தமிழ்நாடு முழுவதும் 15-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. ஒருபுறம் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு சுகாதாரத்துறை மேற்கொண்டு வந்தாலும், மறுபுறம் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதன் ஒருபகுதியாக கடலூர் மாவட்டத்தில் சளி, காய்ச்சல் பாதிப்பால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பரிசோதனையில் கடலூர் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 பெண்களும், நெய்வேலி, முட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 ஆண்களுக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பண்ருட்டியை சேர்ந்த 2 பெண்கள் என மொத்தம் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அச்சப்பட தேவையில்லை என கடலூர் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் சாரா செலின்பால் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 26 பேரிடம் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 
சென்னையில் இருந்து கும்பகோணம் அடுத்த சந்திரசேகரபுரத்திற்கு வருகை தந்த ஒருவர், முல்லைக்கொடி பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் சத்திரம் கருப்பூரை சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, புதுச்சேரியில் 44 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், சிக்கன் குனியா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.