நடந்தே நீட்-ஐ வென்ற மாணவி... 12 கி.மீ வரை நடந்த பார்வதியின் கதை இது...

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவி ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால், அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

நடந்தே நீட்-ஐ வென்ற மாணவி... 12 கி.மீ வரை நடந்த பார்வதியின் கதை இது...

பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைப் பாடம். இதை முழுதாய் புரிந்துகொண்டு மனமொழி ஆக்கிக் கொண்ட மாணவிதான் பார்வதி. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சி திருவண்ணாகோவில்பட்டியை சேர்ந்த நாகராஜ் - பரிமளா என்பவரது மகள் பார்வதி. மருத்துவர் ஆக வேண்டும் என்பது மாணவியின் கனவு.

தனது எண்ணை கிராமத்தில் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் இலுப்பூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்ந்தார் பார்வதி. எண்ணைக்கும் இலுப்பூருக்கும் 6 கிலோ மீட்டர் தொலைவு. இந்த ஊர்களுக்கு இடையே முறையான அரசு பேருந்து வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | நடைபெறும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு...

ஏழ்மை காரணமாக அரசு வழங்கிய சைக்கிளும் குடும்ப பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இப்படி சூழும் தடைகள் பல வந்தபோதும் ஆசைக் கல்விக்கு தடையில்லை என்று நினைத்த பார்வதி, நாள்தோறும் 12 கிலோமீட்டர் நடந்தே சென்று பள்ளிப் படிப்பை தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகளில் பார்வதி கனவுகளைச் சுமந்து கடந்தது மட்டுமே 8 ஆயிரத்து 760 கிலோமீட்டர் இருந்திருக்கும்.  

கிராமத்தில் சொந்தக் காரர்களும், ஊர் மக்களும் பெண்ணை இத்தனை சிரமத்துக்கு ஆளாக்கி படிக்க வைக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் சரி, சில நேரங்களில் அவர்கள் கால்கள் கொண்ட கடும் அலுப்புக்கும் சரி, மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவே முடுக்குவிசையாக இருந்துள்ளது. 

மேலும் படிக்க | மருத்து மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணையை வழங்கிய அமைச்சர் மா.சு...

தமிழ் வழியில் படித்து,  நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து தற்போது 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளார் பார்வதி. சின்னச் சின்ன கதைகள்தாம் இயங்கிக் கொண்டிருக்கும் உலக சக்கரத்தில் பெரும் கருத்துவிதைகள் ஆகின்றன. பார்வதியின் நீட் வெற்றியும் சிறிய கதை ஆயினும் அரிய விதை.. 

மாலைமுரசு செய்திகளுக்காக விராலிமலை செய்தியாளர் பசுபதி.

மேலும் படிக்க | அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவம் - ஆளுநர் தமிழிசை தகவல்!