அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவம் - ஆளுநர் தமிழிசை தகவல்!

விருப்பப்பட்டவர்கள் தமிழில் மருத்துவம் படிக்கலாம்

அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவம் - ஆளுநர் தமிழிசை தகவல்!

புதுச்சேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கெளரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மூத்த குடிமக்களை கெளரவித்தனர்.

பெற்றோர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்,  அனைவரும் தந்தையை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும்  குழந்தையை வளர்க்க பெற்றோர்கள் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகின்றார்கள். ஆனால் வளர்ந்த பின்பு பெற்றோர்களின் பேச்சை கேட்கக் கூட பிள்ளைகள் ஒரு சில துளி நேரத்தை ஒதுக்குவதில்லை. இது வேதனையாக உள்ளது என தெரிவித்த அவர் எனது தாய் தந்தைக்கு மரியாதை கொடுக்கின்றேன். மாற்று கட்சியில் இருந்த என் தந்தையை மதித்து நடக்கின்றேன். 

சமீபத்தில் தமிழ்நாடு அரசு எனது தந்தைக்கு வீடு ஒதுக்கியதை வைத்து என்னை விமர்சனம் செய்தார்கள். தந்தையை பாதுகாக்கவில்லை என  விமர்சனம் செய்தார்கள். இது போன்ற விமர்சனங்களை நான் எப்போதும் பெரிதுபடுத்துவதில்லை. எனக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம் என அவர் வேறு முடிவெடுத்தார். இருப்பினும் மருத்துவர் கண்காணிப்பில் தற்போது பாதுகாப்பாக வைத்துள்ளேன் என்று பேசினார். 

மருத்துவக் கல்லூரியில் தமிழ் 
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விருப்பப்பட்டவர்கள் தமிழில் மருத்துவம் படிக்கலாம் என்றவர் இதற்காக மருத்துவப்படிப்பு புத்தகங்களை தமிழில் அச்சடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு கர்நாடகாவில் கனமழை காரணமாக பால் வரத்து குறைந்ததால் சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது அதை சரிசெய்ய தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வும் தெரிவித்தார். மேலும் தனது தந்தையை தெலுங்கானாவில் தன்னுடைய பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வைத்துள்ளதாகவும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.