ஆயிரம் பவுன் நகையை ஆட்டையை போட்ட அடகுக்கடை நிறுவனம்...

சிவகங்கை மாவட்டத்தில் போலி அடகுக்கடை நடத்திய ஒருவர் பொதுமக்களிடம் இருந்து 1000 பவுன் நகைகளை அபேஸ் செய்திருக்கிறார்.
ஆயிரம் பவுன் நகையை ஆட்டையை போட்ட அடகுக்கடை நிறுவனம்...
Published on
Updated on
1 min read

சிவகங்கை : காரைக்குடி அண்ணா மார்க்கெட் அருகே நைனாமுகமது என்பவர் மீராகோல்டு மார்ட் என்ற பெயரில் அடகுக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். 49 வயதான நைனாமுகமது தங்கள் நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தால் குறைந்த வட்டிக்கு அதிக பணம் தருவதாகவும், கிராமுக்கு ஏற்றபடி பம்பர் பரிசுகள் வழங்கப்படும் என்ற விளம்பரங்கள் மூலம் மக்களைக் கவர்ந்து வந்தார். 

இதை நம்பி காரைக்குடி, பழையசெஞ்சை, ரஸ்தா, அமராவதிபுதூர், தட்டடி, கொரட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மீரா கோல்டு நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து வந்துள்ளனர். ஏற்கெனவே வேறு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகையை தங்கள் நிறுவனத்திற்கு மாற்றுவதற்காக குறிப்பிட்ட பணத்தை வாடிக்கையாளர்களிடம் அளித்து வந்திருக்கிறார் நைனாமுகமது. 

கிட்டத்தட்ட 1000 பவுனுக்கு மேல் அடகு வைக்கப்பட்டதையடுத்து வாடிக்கையாளர்கள் சிலர் தங்கள் நகையை திருப்பி எடுப்பதற்கு முன்வந்தனர். அப்போது அவர்களிடம், மீதமுள்ள வட்டியை செலுத்தினால்தான் நகையை மீட்க முடியும் என கூறியினுப்பியிருக்கிறார்.

இதையடுத்து அந்த பணத்தையும் கட்டி விட்டு மீண்டும் நைனாமுகமதுவை தொடர்பு கொண்டபோது வெளியூரில் வசிப்பதாகவும், காரைக்குடி வரும்போது நகையைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் போனில் கூறியிருக்கிறார் நைனாமுகமது. 

இதனால் சந்தேகமடைந்த கொரட்டியைச் சேர்ந்த சோமசுந்தரி என்பவர் காரைக்குடி உதவி எஸ்.பி.ஸ்டாலினிடம் புகார் அளித்ததையடுத்து தலைமறைவாக இருந்த நைனாமுகமதுவுக்கு வலை விரிக்கப்பட்டது. 

காரைக்குடியில் 1000 பவுனுக்கும் மேல் மோசடி செய்து விட்டு பதுங்கியிருந்த நைனாமுகமது, அவரது மனைவி சிந்துஸ்பானு உள்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார். போலி அடகுக்கடைக் காரரால் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகள் திரும்பக் கிடைக்குமா என ஏக்கத்தோடு வீதியில் நிற்கின்றனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com