ப்பா.. படத்துல கூட இவ்வளவு அழகா இருக்குமான்னு தெரியல...

மாங்காட்டில் மழைநீரை கல்குவாரிக்கு அனுப்பும் கால்வாய் அமைக்கப்பட்டதில், மழை நீர் அருவி போல கொட்டும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
ப்பா.. படத்துல கூட இவ்வளவு அழகா இருக்குமான்னு தெரியல...
Published on
Updated on
1 min read

தொடர் மழை காரணமாக பூந்தமல்லி நகராட்சி, மலையம்பாக்கம், வரதராஜபுரம், மேப்பூர், நசரத்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மாங்காடு நகராட்சியில் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ராட்சத கால்வாய் அமைத்து பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மழை நீரை வீணாக்காமல் கல்குவாரிக்கு அனுப்பும் பணியை நகராட்சி துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தனர்.

தற்போது கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மழை நீர் அனைத்தும் அந்த கால்வாய் வழியாக கல்குவாரிக்கு சென்று அடைகிறது.

இதன் காரணமாக பாதிப்பை ஏற்படுத்தி வீணாகக்கூடிய மழை நீர் குடிநீராக கல் குவாரியில் சேமிக்கப்படுவதும் மாங்காடு நகராட்சி கொளப்பாக்கம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழை நீர் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கல்குவாரியில் சுமார் 20க்கும் மேற்பட்ட ராட்சசன் பள்ளங்கள் உள்ளது தற்போது கால்வாயின் வழியாக வரும் மழைநீர் ஒரு பள்ளத்தில் முழுமையாக நிரம்பி மற்றொரு பள்ளத்திற்கு செல்லக்கூடிய காட்சி பிரம்மாண்ட அருவியை போல் காட்சியளிக்கிறது. மேலும் இந்த கல்குவாரி வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டி இருப்பதால் அவ்வழியாக செல்லக்கூடிய இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது.

இதனால் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் கல்குவாரியில் குளிப்பது, செல்ஃபி எடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த குவாரியில் பலர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு இக்கல் குவாரியை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com