போராட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு...

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
போராட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு...
Published on
Updated on
1 min read

சேலம் | சீலநாயக்கன்பட்டி பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடையை ஒட்டி ஏராளமான  குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்துபவர்களால் அந்தப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

இதனால் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் என ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்றைய தினம் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதன்படி சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதை அடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் காவல் வாகனத்தை முற்றுகையிட்டு கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com