குடியரசு தலைவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு...

சிவராத்திரிக்கு ஈஷாவிற்கு வருகை தர இருக்கும் குடியரசு தலைவரின் வருகை எதிர்
குடியரசு தலைவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு...
Published on
Updated on
2 min read

வருகிற சனிக்கிழமை (18..2.2023) அன்று வரும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா மையத்தில் சிவராத்திரி திருவிழா வெகு விமரசையாக கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பல பிரபலங்கள் உலகளவில் கலந்து கொண்டு பூஜைகளும், ஆடல்களும் பாடல்களுமாக அத்தினத்தைக் கொண்டாடுவது வழக்கம்.

அதிலும், திரை பிரபலங்களான தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உட்பட பல பெரும் நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போல பல முக்கிய அரசியல் பிரமுகர்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருகைக்கு முன்னிட்டு காவல் துறையினர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆனால், ஒரு சில அமைப்புகள் குடியரசு தலைவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தும் மனுக்கள் அளித்தும் வருகின்றனர். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பி வருகிறது.

பல வகையான சர்ச்சைகள் ஏற்கனவே ஈஷா குறித்து உள்ள நிலையில், அதே ஈஷாவிற்கு ஆதரவளிக்கும் வகையில் குடியரசு தலைவரே அங்கு செல்வது தவறு என சில அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ஈஷா நிறுவனம் பழங்குடி மக்களின் நிலத்தை அபகரித்தும், யானைகளின் வாழ்விடத்தையும் நொய்யல் நதி உற்பத்தியாகின்ற இடத்தையும் ஆக்கிரமித்து சுற்றுப்புற சுவர்களை எழுப்பி உள்ளதாகவும், ஈஷா நிறுவனத்தை எதிர்த்து பழங்குடி மக்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பழங்குடியின மக்களில் இருந்து இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரான திரெளபதி முர்மு ஈஷாவில் நடைபெறுகின்ற சிவராத்திரி நிகழ்விற்கு வருகை தருவது என்பது பழங்குடி மக்களின் மனங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் எனவே இது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்ட ஈஷாவிற்கு குடியரசுத் தலைவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள்  குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 

கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கடிதம் அனுப்ப வந்த அவர்கள் குடியரசுத் தலைவர் ஈஷாவிற்கு வருவதை எதிர்த்து கண்டனப் பதாகைகளை ஏந்தி அவர்களது கண்டனத்தை பதிவு செய்து பின்னர் கடிதம் அனுப்பினர். 

இதில் தந்தை பெரியார் திராவிடர் இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், வெள்ளியங்கிரி காப்பு இயக்கம், வெள்ளியங்கிரி மலை பழங்குடி மக்கள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com