
திண்டுக்கல் | பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா, ஆடி உற்சவம், மார்கழி விளக்கு வழிபாடு ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த முக்கிய விழாக்களில் மார்கழி மாத விளக்கு வழிபாடு முக்கியமான ஒன்று. இதனை முன்னிட்டு மார்கழி 1ம் தேதி தனுர் மாத விளக்கு வழிபாடு தொடங்கியது.
மேலும் படிக்க | பொங்கல் பண்டிகையை ஒட்டி...கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை...!
அதிகாலை கோவில் வளாகத்தில் தினந்தோறும் நடைபெற்று வந்த விளக்கு வழிபாட்டில் திண்டுக்கல் நகரில் உள்ள பெண்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனின் 1008 நாமம் பாடி தங்களது குடும்பம் சுபிட்சம் பெறவும், நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை அமையவும், தாலி பாக்கியம் நிலைக்கவும் வழிபட்டு வந்தனர்.
நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 30 நாட்கள் நடைபெற்ற விளக்கு வழிபாட்டின் நிறைவு நாளான இன்று ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு விழா சிறப்பு பூஜையில் கோவில் டிரஸ்டிகள், நகர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் தீப ஆராத்தியில் கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவை முன்னிட்டு வாழைத்தண்டில் சூடம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.