பொங்கல் பண்டிகையை ஒட்டி...கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை...!

பொங்கல் பண்டிகையை ஒட்டி...கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை...!

பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் பூக்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. 

பூக்களின் விலை உயர்வு:

பொங்கல் பண்டிகையை  ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.  அதே நேரம் கடும் பனிப்பொழிவு காரணமாக, பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின்  விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், ஒரு கிலோ மல்லிகைப் பூ 4 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை ஆனது. முல்லை 2ஆயிரத்து, 400 ரூபாய்க்கும், காக்கட்டான் 3 ஆயிரம் ரூபாய்க்கும், செண்டுமல்லி 120க்கும் விற்பனை ஆனது. 

இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில்,  பூக்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். இதனால், பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகைப் பூ 3ஆயிரத்து 500 ரூபாய்க்கும், முல்லை பூ 2 ஆயிரம் ரூபாய் வரையும், பிச்சிப்பூ ஆயிரத்து 200 ரூபாய்க்கும், விற்பனை ஆனது. 

இதையும் படிக்க : ஆளுநருக்கு எதிராக அரசின் பிரதிநிதிகள் மனு...டெல்லி பறந்த ஆர்.என்.ரவி!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில்,  ஒரு கிலோ மல்லிகைப் பூ 3 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 2 ஆயிரம் ரூபாய்க்கும், கனகாம்பரம் ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப் பூவின் விலை 3 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சிப்பூ 2 ஆயிரம் ரூபாய்க்கும், அரளிப் பூ 420 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

அதேபோன்று தேனி  மலர் சந்தையில், பூக்களின் விலை ஒரே நாளில் இரண்டு மடங்காக அதிகரித்தது. நேற்று ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.