ஆட்சியர் அலுவலகம் முன் முகாமிட்ட யானை தாக்கி கூலி தொழிலாளி படுகாயம்...

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அதில் ஒரு யானை தாக்கி கூலி தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகம் முன் முகாமிட்ட யானை தாக்கி கூலி தொழிலாளி படுகாயம்...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி : கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா மற்றும் தமிழகத்தில் உள்ள ஜவளகிரி காப்புக்காடுகளில் இருந்து யானை கூட்டம் தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு உள்ளிட்ட பகுதிகளில் உணவை தேடி வந்து முகாமிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த மூன்று யானைகள் குருபரப்பள்ளி சிப்காட் மற்றும் மலைப்பகுதியில் முகாமிட்டிருந்தது. இந்த யானைகளை விரட்ட சானமாவு காட்டுப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த மூன்று யானைகளும் வனப்பகுதிக்கு செல்லாமல் கிருஷ்ணகிரியை நோக்கி வந்தது. குறிப்பாக தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பையனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகே முட்புதரில் அந்த மூன்று காட்டு யானைகளும் முகாமிட்டுள்ளது.

விடியற்காலை நேரத்தில் யானைகள் இருப்பதை அறியாமல் வந்த பையன பள்ளியை சேர்ந்த ரவி என்ற கூலி தொழிலாளி, எதிர்பாராத விதமாக யானை தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்து பொதுமக்கள் மற்றும்  வனத்துறையினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் தற்போது யானைகள் காட்டுப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில் இருந்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ளதால் யானைகள் இப்பகுதிக்கு வரவிடாமல் காட்டுப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com