சென்னையின் புதிய அடையாளம் ட்ரோன் காவல்நிலையம்...

கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்களைத் தடுப்பதற்காகவும், சென்னையில் மக்களின் பாதுகாப்புக்காக ட்ரோன் காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

சென்னையின் புதிய அடையாளம் ட்ரோன் காவல்நிலையம்...

சென்னை முக்கிய நகரங்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் பொதுமக்களிடம் திருட்டு பயமும் தொற்றிக் கொண்டுள்ளது. குற்றவாளிகளைக் கண்டறிவதிலும் போலீசாருக்கு பல வழிகளில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த சிக்கலுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர் போலீசார். 

சி.சி.டி.வி. கேமராவை காவல்துறையின் மூன்றாவது கண் என்றே குறிப்பிடுவதுண்டு. இந்த மூன்றாவது கண்ணைக் கொண்டு உருவாக்கிய ட்ரோனை தற்போது நகரங்களில் பறக்க விடத் தயாராகி விட்டனர் போலீசார். 

மேலும் படிக்க | வடகொரியாவிடம் தோற்றதா தென்கொரியா...பொறுப்பற்ற அரசாங்கமே காரணம்!!!

ஆளில்லா விமானம் எனப்படும் இந்த ட்ரோன் கேமராவில் உயர்தர தொழில்நுட்பங்களைப் புகுத்தி குற்றங்களைத் தடுப்பதற்கான இந்த ட்ரோன் காவல் நிலையம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அதற்கு 3 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கி அரசாணையும் வெளியிட்டிருந்தார். 

இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்தது மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ட்ரோன் காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் காவல் நிலையத்தில் பொறியியல் பட்டதாரிகள் உள்பட 20 பேர் பணியில் அமர்த்தப்படுவர். 

மேலும் படிக்க | சொல்லி அடிப்பேனடி...வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி அளித்த தென்கொரியா!!

பொதுமக்கள் கூடும் இடங்களில் திருட்டை தவிர்க்கும் வகையில், இந்த ட்ரோன்களை பறக்க விடுவதும், அங்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் சி.சி.டி.வி. ஆதாரங்களைக் கொண்டு குற்றவாளிகளை எளிதில் சிக்க வைப்பதும்தான் போலீசாரின் டார்கெட். அதிலும் இந்த ட்ரோன் கேமராவில் ஃபேஸ் ரெகஹ்னேஷன் எனக் கூறப்படும் முகத்தை அடையாளம் காட்டக்கூடிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. 

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான புகைப்பட அடிப்படையிலான தகவல்களை ட்ரோன் கேமராவில் இடம் பெறச் செய்துள்ளனர் போலீசார். இனி எந்த குற்றவாளியும், மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டால், தனக்கு மேலே சுற்றி வரும் கேமராக் கண்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற அச்சம் அவர்களுக்குள் ஆழமாக இறங்கி விடும். 

மேலும் படிக்க | அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் மீட்பு...

மேலும் ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் வரும்போதெல்லாம், அவர்கள் செல்லும் சாலையில் இந்த சிறிய ரக ட்ரோன்களை பறக்க செய்து பாதுகாப்பு உள்ளதா என்றும் எளிதில் அறிந்து கொள்ள முடியும். இந்த அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள ட்ரோன் காவல் நிலையங்கள் சென்னையின் முக்கிய பகுதிகளில் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது. 

அதோடு கடற்கரையில் பகுதியில் யாரேனும் சிக்கி மூழ்கினால் அவர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் வகையிலும், வட்டவடிவ பலூனை சுமக்கும் அளவிலும் 15 கிலோ எடையை தாங்கக் கூடிய பெரிய ட்ரோனும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விஜய் படக்குழு மேல் புகார்... பத்திரிக்கையாளர் மேல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு...

சுமார் 120 மீட்டர் உயரம் வரை பறந்து 15 கி.மீ. தூரம் வரை கண்காணிக்கும் இந்த ட்ரோன்களிடம் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க இயலாது என்பது போலீசாரின் நம்பிக்கையாக உள்ளது. எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துக்குவான் என துணிந்து தவறு செய்யும் குற்றவாளிகள், இனிமேல் கடவுளுக்கு பயப்படுவார்களோ இல்லையோ, இந்த ட்ரோன் கேமராக்களுக்கு பயப்படுவது நிச்சயம்...

மாலை முரசு செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் அம்ஜித்வுடன் செய்தியாளர் முரளி கிருஷ்ணா.

மேலும் படிக்க | சென்னை: தடை செய்யப்பட்ட பகுதிகளில் பறந்த ட்ரோன்.. கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு..!