மதுரை | மேலூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மேலூர் நகர் கழகம் சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் மேலூர்- சிவகங்கை சாலையில் நடைபெற்றது.
இதில் 49 மாட்டு வண்டிகள் பங்கேற்று பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்க பரிசுகளும், சுழற் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,மதுரை வடக்கு மாவட்ட திமுக மேலூர் நகர் கழகம் சார்பில் மேலூர்-சிவகங்கை சாலையில் இன்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சிவகங்கை தூத்துக்குடி தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 49 மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட இந்த பந்தயத்தில் பெரிய மாடு சிறிய மாடு நடுமாடு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. பெரிய மாடு பிரிவின் பந்தயத்தை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து வெற்றி வாகை சூடிய மேலூர் அருகே எட்டி மங்கலம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பங்கஜம் கணேசன் அவர்களின் மாட்டு வண்டிக்கு ரூபாய் 2 லட்சம் முதல் பரிசாகவும், தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு இரண்டாவது பரிசாக ஒன்றரை லட்ச ரூபாயும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலூர் நகர் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பார்வையாளர்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று ஆர்வத்துடன் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு மேலூர் நகர் மன்ற தலைவர் திரு.முகமது யாசின் ரொக்க பரிசினையும்,சுழற் கோப்பைகளையும் பரிசாக வழங்கினார்.
மேலும் படிக்க | மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல்...!!