வேழம் இயலியல் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பொம்மை யானைகளை சேதப்படுத்திய காட்டு யானைகளால் அதன் பணிகள் முடங்கியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் யானைகளின் வாழ்வியல் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் வனத்துறை சார்பில் வேழம் இயலியல் பூங்கா அமைக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கிடங்கு வளாகத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
அடர்ந்த காடுகள் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புலி,சிறுத்தை,கரடி என எண்ணற்ற வன உயிரினங்கள் இருந்தாலும், யானைகளின் எண்ணிக்கையே அதிகம் .தமிழகம் ,கேரளா, மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளதால் இவ்வழியே கூட்டம் கூட்டமாக யானைகள் வலசை செல்வது வழக்கம். வழித்தட பாதையில் ஏற்படும் இடையூறுகளால் திசை தப்பும் சில யானைகள் வனத்தை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுவதும், இதனால் யானை மனித மோதல்கள் நடப்பதும் தொடர் நிகழ்வாகிவிட்டது .யானைகளின் நடமாட்டத்தை கண்டவுடன் சிலர் அதனை கற்களாலும் தீ பந்தங்களாலும் ராக்கெட் வெடிகளாலும் தாக்குவது ,நேரடி மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேளிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர் கொள்வதால் யானைகள் உயிரிழக்கின்றன.
யானை தாக்கி மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனால் யானைகள் மீதான மனிதர்களின் வெறுப்புணர்ச்சியை போக்கும் முயற்சியாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளின் முக்கியத்துவம் அவற்றின் வாழ்வியல் முறை குணாதிசயங்கள் போன்றவற்றை விளக்க இந்த வேழம் இயலியல் பூங்கா அமைக்கப்பட்டு வந்தது.
உலகில் வாழ்ந்த யானை இனங்கள் அழிந்து போன யானை இனங்கள் வாழ்ந்த காலங்கள் நம் சங்க இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் யானைகளின் பங்களிப்பு அதன் வரலாறு போன்றவற்றை விளக்கும் சுவர் ஓவியங்கள் சிற்பங்கள், அறிய புகைப்படங்கள் ,மன்னர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட யானைகள் உருவம் பொறித்த நாணயங்கள் என இந்த பூங்காவில் வைக்கப்பட்டு உள்ளது.இப்பணிகள் ஏறத்தாழ 70 சதவீதம் வரை நிறைவடைந்தும் விட்டது. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக இப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வேழம் இயலியல் பூங்கா திட்டம் முடக்கப்பட்டுள்ளது. வனத்தை ஒட்டிய பகுதியில் இப்பூங்கா அமைக்கப்பட்டு வரும் நிலையில் பூங்காவில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் காட்டு யானைகள் தாகம் தீர்க்க வனத்துறை கட்டியுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் அருந்த வரும். யானை கூட்டங்கள் புகுந்து காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள யானை பொம்மைகளை நிஜ யானைகள் என நினைத்து தாக்கி சேதப்படுத்தி வருகின்றன. இதில் குறிப்பாக மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகளையும் வனத்துறையினரையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கலங்கடித்து வரும் "பாகுபலி" என்று அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை பூங்காவினுள் அடிக்கடி புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல லட்சம் செலவில் கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பிரமாண்ட யானை பொம்மைகள் சேதமடைந்து வருகிறது.
தற்போது இந்த சேதமான யானை உருவப் பொம்மைகள் அப்புறப்படுத்தப்பட்டு காட்டு யானைகளின் கண்களில் படாதவாறு மரக்கிடங்கின் மூலையில் போடப்பட்டுள்ளது. யானையை குறிக்கும் வேழம் என்ற செந்தமிழ் சொல்லில் அமைய உள்ள இவ்விழிப்புணர்வு விளக்கப் பூங்கா குறித்த ஆர்வம் உருவாகி இருந்த நிலையில் திட்டம் தற்போது முடக்கப்பட்டு கிடப்பது பொதுமக்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. முடங்கி கிடக்கும் இப்ப பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கி விரைவில் விழிப்புணர்வு பூங்காவை திறக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது அரசின் கவனத்திற்கு வேழம் இயலியல் பூங்கா குறித்த விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது விரைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகள் துவங்கும் என்றனர்.
மேலும் தெரிந்து கொள்ள : நடுங்கும் குளிரிலும் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்...பனிமூட்டத்தால் ஏமாற்றம்!!!