வீட்டில் திருடிய நண்பனை அடித்தே கொலை... எலும்புகூடுகளை வைத்து அடையாளம் கண்டுபிடிப்பு...

வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்ட இளைஞர் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு மாதம் காணாமல் போனவர், எலும்புக்கூடாய் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் திருடிய நண்பனை அடித்தே கொலை... எலும்புகூடுகளை வைத்து அடையாளம் கண்டுபிடிப்பு...
Published on
Updated on
2 min read

கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மாசானம். 37 வயதான மாசானம், இதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் என மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர்.  மாசானத்துக்கு இயல்பாகவே திருட்டுப்பழக்கம் இருந்து வந்திருக்கிறது.

சிறு சிறு பொருட்களை திருடி விற்றதோடு, அதை தனது நண்பர்களிடமும் தெரிவித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொள்ளை நடந்த சில மாதங்கள் கழித்து, ஒரு நாள் பாலகிருஷ்ணன், மாசானம் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் உனது வீட்டில் திருடியது நான்தான் என உளறியிருக்கிறார் மாசானம்.

தனது வீட்டிலேயே திருடி விட்டு தன்னிடமே சொல்வதற்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என நினைத்துக் கொண்ட பாலகிருஷ்ணன், இதுகுறித்து இன்னொரு நண்பன் விக்னேஷிடம் ஆலோசனை கேட்டிருக்கிறான். 

மீண்டும் ஒரு முறை மாசானத்தை அழைத்து, மது விருந்து கொடுக்கலாம். அப்போது இதுவரை எங்கெங்கெல்லாம் திருடினான் என்ற உண்மையை கறந்து விடலாம் என விக்னேஷ் கூறியிருக்கிறான். அதன்படி, கடந்த மாதம் 18-ம் தேதியன்று பாலகிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோர் மாசானத்தை சுசீந்திரம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

ஆள்-அரவம் அற்ற மயானத்தின் அருகே அமர்ந்து மது அருந்தியபோது திருட்டு குறித்து பேச்சுவார்த்தை எழுந்தது. இந்த பேச்சுவார்த்தை வாக்குவாதமாகி கைகலப்பாகவும் மாறியது. 

இறுதியில் பாலகிருஷ்ணனும், விக்னேசும் இணைந்து, மாசானத்தை கடுமையாக தாக்கி கொன்று விட்டு அப்படியே போட்டு விட்டு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர். ஒரு மாத காலமாக புதர்களுக்கு மத்தியில் அழுகிக் கிடந்த மாசானத்தின் உடலை நாய்கள் கடித்துக் குதறி இழுத்துச் சென்றிருக்கிறது.

தற்போது கிடைத்த எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீசார் அதனை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி விட்டு கொலையாளிகளான பாலகிருஷ்ணன், விக்னேஷை கைது செய்துள்ளனர். 

தனது வீட்டில் திருடியதை நண்பன் ஒப்புக் கொண்டாலும், ஆத்திரம் தீராமல் அடித்து கொலை செய்து ஒரு மாத காலம் எதுவும் நடக்காதது போல நாடகம் ஆடி இருக்கின்றனர் மாசானத்தின் நண்பர்கள்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com