மதுரையைச் சேர்ந்த ராம்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை திருக்குறளை கற்பிக்க வேண்டும், திருக்குறள் சம்பந்தமான கேள்விகள் இடம்பெற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, திருக்குறள் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தக் கூடியது எனவும் 1,000 திருக்குறளில் 5 திருக்குறள்களின் பொருளை மாணவர்கள் உணர்ந்தாலே அவர்களை நல்வழிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தது.
மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பெற்றோரையும், ஆசிரியரையும் தாக்கும் சூழ்நிலை உள்ளதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களை நல்வழிப்படுத்த நன்னெறி கல்வி மிக அவசியம் என வலியுறுத்தினர்.
திருக்குறளில் 108 அதிகாரங்களில் 1050 குறள்களை மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற அரசாணையை ஏன் சரிவர பின்பற்றவில்லை? என அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதே நிலை நீடித்தால் தேர்வு வினாத்தாள் அமைக்கும் குழுவினை கலைக்க நேரிடும் என நீதிபதிகள் ஆவேசம் தெரிவித்தனர்.
மேலும் திருக்குறள்கள் பாடத்திட்டத்தில் இடம் பெறுவது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை செயலர் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.