விருகம்பாக்கத்தில் உள்ள நிலத்தை பிளாட் போட்டு விற்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் சுபாஷ் (38). இவரது அலுவலக விளம்பர பலகையைப் பார்த்து சுபாஷை அணுகிய கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர், நிலம் வாங்க 15 லட்சம் ரூபாயை தனியார் நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார்.
ஆனால், சிறிது நாட்களில் தனக்கு நிலம் தேவைப்படவில்லை எனக்கூறி மீண்டும் தான் வழங்கிய பணத்தை திருப்பித் தருமாறு மேலாளர் சுபாஷிடம் கூறியுள்ளார். பின், நிறுவனத்தின் தரப்பில் இருந்து மேலாளர் சுபாஷ் மூலம் சுந்தரேசனுக்கு 3.5 லட்சம் ரூபாய் திருப்பி வழங்கப்பட்டு, மீதமுள்ள பணத்தை கொடுக்க கால அவகாசம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை நம்பாத சுந்தரேசன், இது தொடர்பாக சுந்தரேசன் தரப்பில் வளசரவாக்கம் உதவி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பயந்து போன சுபாஷ், தனது நிறுவனத்தின் பணி புரியும் ஒரு பெண் ஊழியரான கீர்த்தனாவிடம் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | சதுரங்க வேட்டை பாணியில் அழகிகளை வைத்து பண மோசடி...
அவரது கதையி முழுமையாக கேட்ட கீர்த்தனா, தனக்கென ஒரு திரைக்கதையை உருவாக்க துவங்கி இருக்கிறார். இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து தருவதாக கூறி, தனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் என்றும், அவர் மூலம் இதனை தீர்த்துக் கட்டலாம் என்றும் கூறி அவரிடம் பணம் கரக்க திட்டம் தீட்டி இருக்கிறார்.
தனது நண்பரான வீரா என்பவரை, வழக்கறிஞர் என சுபாஷிடம் அறிமுகப்படுத்திய கீர்த்தனா, புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையமான வளசரவாக்கம் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆணையருக்கு 1 லட்சம் ரூபாயும், விருகம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும் கொடுத்தால் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் எனக்கூறி சுபாஷிடம் இருந்து 1.5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர்.
பின் இரண்டு நாள் கழித்து மீண்டும் சுபாஷின் அலுவலகத்திற்கு கீர்த்தனாவுடன் வந்த வீரா காவல் துறையினருக்கு மேலும் பணம் தேவைப்படுவதாகக் கூறி பணம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுபாஷ் தனக்கு தெரிந்த தொடர்புகள் மூலம் விசாரித்தபோது வீரா என்பவர் போலி வழக்கறிஞர் என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் சுபாஷுக்கு தெரியவந்தது.
லேசாக சுதாகரித்துக் கொண்ட சுபாஷ் தன்னிடம் பணம் இல்லை எனவும், இந்த பிரச்சனையை தாங்கள் பேசி சுமூகமாக முடித்துக் கொள்வதாகவும் வீரா என்பவரிடம் தெரிவித்துள்ளார். மேலும், தான் கொடுத்த 1.5 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தருமாறும் இருவரிடமும் கேட்டுள்ளார்.
மேலும் படிக்க | சமூகத்தினரை இழிவுபடுத்த சிறுமிகள் விற்பனையா?
இதனால் ஆத்திரமடைந்த கீர்த்தனா மற்றும் வீரா ஆகிய இருவரும் பணத்தை திருப்பித் தர முடியாது எனவும், உன்னால் தங்களை எதுவும் செய்ய முடியாது எனவும் கூறி தொழில் செய்ய விடமாட்டோம் என மிரட்டிச் சென்றுள்ளனர். இதனால் அதிச்சியடைந்த சுபாஷ் இச்சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வீரா மற்றும் கீர்த்தனா மீது உரிய நடவடிக்கை வேண்டி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மோசடி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் போலி வழக்கறிஞரான வீரா மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர் கீர்த்தனா ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.