”என் மரணத்திற்கு என் மருமகன் தான் காரணம்” வீடியோ வெளியிட்டு தலைமை காவலர் விபரீத முடிவு!

”என் மரணத்திற்கு  என் மருமகன் தான் காரணம்” வீடியோ வெளியிட்டு தலைமை காவலர் விபரீத முடிவு!

சேலத்தில் குடும்ப பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற தலைமை காவலரின் உருக்கமான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி வலின்மேடு காவல் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார் சேலம் மாநகர ஆயுதப்படை ஏட்டு காளியப்பன். குடும்ப பிரச்சனையில் இருந்து வந்த காளியப்பன், கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனையை தாங்க முடியாத ஏட்டு காளியப்பன், வீட்டில் சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதுபற்றி தெரியவந்ததும் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் காளியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு, “என் மரணத்திற்கு என் மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம்” என்று காளியப்பன் பேசிய வீடியோ தெரியவந்தது. பின்னர் அந்த வீடியோ குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க : ரூ. 10 கோடி மதிப்பில் உதவி! மணிப்பூர் முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்...!!

இதற்கிடையில் காளியப்பன் பேசியிருந்த வீடியோவில், ”தனக்கு மூன்று மகள்களும், இரண்டு ஆண் மகன்களும் உள்ளனர். முதல் மகளை அரசு வேலையில் இருப்பதாக கூறி, ராஜகுமாரன் என்பவர் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்ததால் மூன்று லட்சம் ரொக்கமும், ஆறு பவுன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் வரதட்சணையாக கொடுத்ததாக வீடியோவில் கூறியுள்ளார். மேலும் தொழில் துவங்குவதாக கூறி 16 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு எனது மகளையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார். பணத்தை திரும்பி கேட்டபோது, வாங்கியதற்கு என்ன சாட்சி உள்ளது என்று கேட்கிறார். 

தன்னால் கடனை கட்ட முடியாமல் சிரமத்தில் உள்ளதாகவும், ஒரு போலீஸ்காரனாக இருந்தும் என் மகளின் வாழ்க்கையை காப்பாற்ற முடியவில்லை. பணபலம், அரசியல் பலம் வைத்துக்கொண்டு, உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுகின்றனர். மேலும் என் மீது பொய்யான புகார் அளித்ததாகவும் வேதனை தெரிவித்தார். எனது மரணத்திற்கு மருமகன் மற்றும் அவரது குடும்பத்தார் தான் காரணம், எனவே எனது குடும்பத்திற்கும் எனது மகளுக்கும்  காவல்துறையும், நீதிமன்றமும் தான்  சரியான நீதி சொல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நான் இறந்துவிட்டால் எனது இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற தலைமை காவலரின் உருக்கமான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.