திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தற்போதைய நகராட்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். 2012 மார்ச் 29-ம் தேதியன்று திருச்சியில் 10-வது கிராஸ் வீட்டில் இருந்து நடைபயற்சிக்காக கிளம்பிய ராமஜெயம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.
மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்ட ராமஜெயம்...
திருச்சி - கல்லணை சாலையில் உள்ள திருவளர்சோலை பகுதியில் கட்டுக்கம்பிகள், டேப் ஆகியவற்றால் கட்டப்பட்டு முட்புதருக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார் ராமஜெயம். ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க திருச்சி மாநகர கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில் 7 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
ராமஜெயம் கொலைக்கும், கூலிப்படைக்கும் தொடர்பா?
ராமஜெயம் வழக்கை போலீசார் விசாரித்து வந்த நிலையில் 2006-ம் ஆண்டு திருச்சியில் முட்டை ரவி என்ற ரவுடி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார். இந்த என்கவுண்டரில் இருந்து, ராமஜெயம் கொலைக்கு கூலிப்படை காரணமாக இருக்கலாம் என விசாரணை திசை திரும்பியது.
சி.பி.ஐக்கு மாற்ற மனு தாக்கல்...
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதில் இருந்து, ராமஜெயத்தின் உதவியாளர்கள், அவர் சார்ந்தவர்களிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடைபெற்றது. தங்கள் குடும்பத்தை குறி வைத்து விசாரணை நடைபெறுவதால் அதிருப்தியடைந்த ராமஜெயம் மனைவி லதா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற மனு தாக்கல் செய்தார்.
தொழில் போட்டிகள் காரணமாக நடந்ததா?
மறுபுறம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை 2017-ம் ஆண்டு வரை நடந்து வந்தும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் போனது. தொழில் போட்டி மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாகவே கொலை நடந்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக 1100 பேருக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டதாகவும் சட்டசபையில் விளக்கம் அளித்தார் அன்றைய முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி.
தகவல் அளிப்பவருக்கு வெகுமதி?
ராம ஜெயம் கொலை தொடர்பாக பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா 2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்தபோதும், கொலையாளியின் நிழலைக் கூட நெருங்க முடியாமல் போனது. பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு சில நாட்களுக்கு முன் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூடுபிடித்த வழக்கு...
இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையிலும், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவே தற்போது இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.
ராமஜெயம் கொலை வழக்கு – குற்றவாளிகள் பிடிபடுவார்களா?
தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடந்து வரும் நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. பத்து வருடங்களாக பதுங்கிய உண்மைகள் இனியாவது வெளியே வருமா?