ரூ.920 கோடி சுருட்டல்... தண்ணி காட்டும் தந்தை - மகன்..

தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வட்டியாய் தருவதாக கூறி 900 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த கும்பல் தற்போது வரை போலீசாரிடம் சிக்காமல் உள்ளது.

ரூ.920 கோடி சுருட்டல்... தண்ணி காட்டும் தந்தை - மகன்..

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன் மற்றும் அவரது மகன் அலெக்சாண்டர் இருவரும் இணைந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு என்ற நிதிநிறுவனத்தை  நடத்தி வந்துள்ளனர். தங்களிடம் முதலீடு செய்தால் யாரும் அளிக்க முடியாததைக் காட்டிலும் அதிகப்படியாக வட்டி தரப்படும் என விளம்பர யுக்தியைக் கையாண்டது இந்த களவாணி குடும்பம்..

ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அவர்களுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வட்டி வழங்கப்படும் என்ற வார்த்தைகளை நம்பிய பொதுமக்கள் இந்த ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். ஆருத்ரா கோல்டு, டிரேடிங் நிறுவனம், எல்வின் நிறுவனத்தைப் போல அதிகப்படியான வட்டி தருவதாகவே கூறப்பட்டாலும், எப்படி இந்த அளவுக்கு வட்டி தொகை தர முடிகிறது என சிலருக்கு சந்தேகம் எழுந்தது. 

மேலும் படிக்க | நில மோசடி வழக்கில் வட்டாட்சியர் கைது... சிபிசிஐடி அதிரடி...

இதுகுறித்து நிறுவன உரிமையாளர்களிடமும் கேட்டதற்கு தங்களுக்கு மலேசியாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாக கூறியிருக்கிறார் அலெக்சாண்டர். தாங்கள் தரும் பணத்தை சிங்கப்பூர், மலேசியா, துபாய் நாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்வதாகவும் அடித்து விட்டிருக்கிறார். 

மேலும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு ஆட்களை சேர்த்து விடுபவர்களுக்கு தனியாக ஊக்கத் தொகையும் வழங்கப்படும் எனவும் சதுரங்கவேட்டை பாணியில் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளனர் தந்தையும் மகனும்.. சுமார் 5 வருடங்களாக முதலீட்டார்களை நேரில் சந்தித்து பணம் பெற்றுக் கொண்ட சவுந்தரராஜனும் அலெக்சாண்டரும் அடிக்கடி வெளிநாடு சென்று வந்துள்ளனர். 

மேலும் படிக்க |  பொதுக்கூட்டத்தில் மோதல்... ஒருவர் பலி...

எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம்தான் என உற்சாகத்தில் மிதந்த மக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்ததையடுத்து கம்பி நீட்டியது ஹிஜாவு. கடந்த 3-ம் தேதி சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முறையிட்ட பொதுமக்கள் ஹிஜாவு நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தனர். 

தங்கள் நிறுவன உரிமையாளர் வருவார் வருவார் என கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் காத்திருந்த முதலீட்டாளர்கள் புகார் அளித்திருந்த நிலையில் தற்போதுதான் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிஜாவு நிறுவனத்துக்கென தனியாக ஒரு இணையதளமே உருவாக்கப்பட்டிருந்தாலும், அதிலும் குளறுபடிகள் அதிகமாகவே தென்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | மூன்றாவது முறையாக மீண்டும் தோல்வியடைந்ததா ஆர்ட்டெமிஸ்?!!!

நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு முதல், அங்கீகாரம் அளிக்கப்பட்டது என எந்த தகவலுமே முறையாக தெரிவிக்கப்படவில்லை. அதோடு, அலெக்சாண்டர் எஸ்.எல்.சி.சி. மெம்பர் ஃபுட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-வில் அங்கத்தினராக இருப்பதாக அளித்த தகவலும் முற்றிலும் தவறான ஒன்றாகும். நம்பத்தகுந்த தகவல் எதுவுமே இல்லையென்றாலும், இந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து விட்டு தற்போது புலம்பிக் கொண்டிருக்கின்றனர். 

950 கோடிக்கும் மேல் சுருட்டிக் கொண்டு தலைமறைவாக இருக்கும் தந்தை - மகன் போலீஸ் பிடியில் சிக்குவார்களா? முதலீட்டாளர்களுக்கு அவர்கள் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா என்பது போலீசுக்கே வெளிச்சம்.. 

மேலும் படிக்க | மருத்துவ துறையில் முதலிடத்தில் தமிழகம்... முதலமைச்சர் பெருமிதம்!!!