வார் ரூம்-மை அலங்கரித்த தமிழர்...தாமரையை வீழ்த்தி காட்டிய ஐ.ஏ.எஸ் டீம்!

வார் ரூம்-மை அலங்கரித்த தமிழர்...தாமரையை வீழ்த்தி காட்டிய ஐ.ஏ.எஸ் டீம்!

காங்கிரஸ் வார்ரூம்மில் திறம்பட செயல்பட்டு கர்நாடகாவில் ஆட்சி அமைக்க காரணமாக இருந்த சசிகாந்த் செந்திலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து,
மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்த கர்நாடகத் தேர்தல் முடிகள் நேற்றைய தினம் வெளியானது. மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் ஆளுங்கட்சியாக இருந்த பாஜக வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு பாஜகவுக்கு மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தியே காரணம் என்றே சொல்லலாம். அதேசமயம், காங்கிரஸ் வெற்றிக்கு அவர்களின் அமைதியான வார் ரூம் - மே காரணம் என்று சொல்லலாம். 

கர்நாடக தேர்தலையொட்டி, காங்கிரஸ், பாஜக இரு தேசிய கட்சிகளும் தங்களுடைய வலுவான பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர். அந்தவகையில், பாஜக தரப்பில் இருந்து பிரதமர் மோடி, அமித்ஷா, நிதின் கட்கரி, ஜேபி நட்டா என பல தேசிய தலைவர்களும், காங்கிரஸ் தரப்பில் இருந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலரும் சுழன்று சுழன்று பரப்புரை நடத்தினர். ஆனால், இவர்களையெல்லாம் தாண்டி கர்நாடக தேர்தல் களத்தில் இரண்டு தமிழர்களின் பெயர்களும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவருமே கர்நாடகாவில் அரசு அதிகாரிகளாக பணியாற்றியவர்கள். ஒருவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவிட்டு, விருப்ப ஓய்வுப்பெற்று இன்றைக்கு தமிழக பாஜகவின் தலைவராக இருக்கிறார் அண்ணாமலை. மற்றொருவர், அதேமாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வுப்பெற்று காங்கிரஸில் இணைந்த சசிகாந்த் செந்தில். இவர்கள் இருவருமே கர்நாடக தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர்கள் என்றே சொல்லலாம்.

இதையும் படிக்க : வெளியூர் சென்ற மருத்துவர்...பீரோவை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள்!

அதன்படி பார்த்தால், காங்கிரஸ் கட்சி கர்நாடகத் தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கி விட்டது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி 3 வார் ரூம்களை அமைத்து அதன் பொறுப்பாளராக சசிகாந்த் செந்திலை நியமித்தது. அவர் கடந்த ஓரண்டுகளாக கர்நாடகாவிலேயே தங்கிப் சிறப்பாக பணியாற்றினார். கர்நாடகாவில் அரசுக்கு எதிரான அதிருப்தி உணர்வை கட்டியெழுப்பியதில் தொடங்கி, பிரசார யுக்திகளை வடிவமைத்தது என பல நுணுக்கங்களை தனது பணிகளில் ஈடுபடுத்தி காங்கிரஸின் வெற்றியை கர்நாடகாவில் அலங்கரித்துள்ளார். என்னதான் கட்சிக்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் சுழன்று சுழன்று பிரசாரத்தில் ஈடுப்பட்டிருந்தாலும், இந்த வெற்றியில் சசிகாந்த் செந்திலின் பணி பெரும்பங்கு வகிக்கிறது. கர்நாடகத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து சசிகாந்த் செந்திலை நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாக பயன்படுத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தற்போதைய காங்கிரஸ் வெற்றிக்கு காங்கிரஸ் அமைத்த வார் ரூம்மே காரணம் என்றும், அந்த வார்ரூம்மில் திறம்பட செயல்பட்டு கர்நாடகாவில் ஆட்சியை அலங்கரிக்க செய்த சசிகாந்த் செந்திலையும் இணையத்தில் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.