மீண்டும் எடப்பாடி கதவை தட்டும் ஓபிஎஸ் டீம்....ஈபிஎஸ் வகுக்கும் யூகம் என்ன?

மீண்டும் எடப்பாடி கதவை தட்டும் ஓபிஎஸ் டீம்....ஈபிஎஸ் வகுக்கும் யூகம் என்ன?
Published on
Updated on
2 min read

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி அளித்த தீர்ப்பால் ஓபிஎஸ் பக்கம் இருப்பவர்கள் தற்போது ஈபிஎஸ் பக்கம் தாவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

உட்கட்சி பூசல்:

அதிகமுவில் சமீப காலமாகவே அதிகாரப்போட்டி என்பது உச்சத்தை தொட்டுவருகிறது. யாருக்கு அதிகாரம் என்பதில் ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் மாறி மாறி நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் ஈபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலளார் என்பது உறுதியானது. 

ஆகஸ்ட் 17 க்கு பிறகு:

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே அதிமுகவில் தொடரும் என்றும் நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்பது உறுதியானது.

ஓபிஎஸ்க்கு பெருகிய ஆதரவு:

நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை அடுத்து ஈபிஎஸ் பக்கம் ஆதரவாக இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஓபிஎஸ் பக்கம் சாய ஆரம்பித்தனர். அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ் அழைப்பு  விடுத்தும் ஈபிஎஸ் ஏற்க மறுத்ததால், தன்னுடைய அசைன்மெண்ட் டீமை வைத்து பல்வேறு யூகங்களை தீட்ட ஆரம்பித்தார். அதன்படி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ்ஸின் ஆதரவாளர்களிடம் தங்களுடைய பேச்சு ஜாலத்தை காட்டி தங்கள் பக்கம் வரவழைத்தனர். இதனால் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு அதிகரித்தது.

செப்டம்பர் 2:

ஓபிஎஸ்க்கு ஆதரவு பெருகி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2 ஆம்  தேதி, தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு  வழக்கில் இரு நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் கொண்ட அமர்வு தீர்வு அளித்தது. அதில் தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பு செல்லாது என்றும், ஜுலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பின் மூலம், மீண்டும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார் ஈபிஎஸ்.

மீண்டும் ஈபிஎஸ் கதவை தட்டும் நிர்வாகிகள்:

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு பிறகு ஓபிஎஸ் பக்கம் தாவிய அதிமுக நிர்வாகிகள் சிலர் மீண்டும் ஈபிஎஸ் பக்கம் தாவுவதற்காக சிந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஒரு சிலர் யோசனையில் இருந்தாலும், பலர் அதற்கான பேச்சு வார்த்தையை துவங்கிவிட்டதாகவும், அவர்கள் தங்கள் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு அவசரத்தில் தெரியாமல் முடிவு எடுத்துவிட்டோம் இனி எடப்பாடியார் அணியில் எப்போதும் இருப்போம் என கூறி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி கட்சியில் பெரும்பான்மை இருந்தபோதே விலகி சென்றவர்கள் பிற்காலங்களில் அணிமார தயங்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து, அவர்களை முற்றிலும் புறக்கணிக்காமல் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் வகையில் யூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இப்படி அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என மாறி மாறி தாவி வருவதால் அரசியல் வல்லுநர்கள் அடுத்து என்ன நடக்கும் என்பதை கூர்ந்து கவனித்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com