எடப்பாடிக்கு ஆதரவாக பேசும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.
அதிகாரபோட்டி:
அதிகமுவில் சமீப காலமாகவே அதிகாரப்போட்டி என்பது உச்சத்தை தொட்டுவருகிறது. யாருக்கு அதிகாரம் என்பதில் ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் மாறி மாறி நீதிமன்றத்தில் போராடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் ஈபிஎஸ் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலளார் என்பது உறுதியானது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று ஓபிஎஸ் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
ஆர்.பி.உதயகுமார் பேட்டி:
இப்படியே அதிமுகவில் அதிகார போட்டியானது அணையாத நெருப்பாய் எரிந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எப்பொழுதும் அதிக ஆதரவு அளித்து பேச கூடிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பொருத்தமட்டில் சென்னை உயர்நீதிமன்றம் ஜுலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலளாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற தெளிவான விளகத்தை அளித்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவை வழிநடத்தும் பொறுப்பு உள்ளதாக கூறினார்.
திமுகவை சாடிய ஆர்.பி.உதயகுமார்:
திமுகவை தோலுரித்து காட்டுவோம்:
அதிமுகவை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் வரை சென்று உயர் நீதிமன்றம் இன்றைக்கு வரிக்கு வரி தெளிவான, தெரியாதவர்கள் எல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோன்று, அதிமுக ஒற்றுமையாகத்தான் இருக்கிறது என்றும் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த தீர்ப்புக்கு பிறகு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திமுக அரசை தோலுரித்து காட்டுவதற்கும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவற்கு மிகுந்த வேகத்தோடும், உத்வேகத்தோடும், தொண்டர்கள் உழைக்க தயாராகி விட்டதாகவும் கூறினார்.
சசிகலாவின் ஒற்றுமை:
சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒற்றுமை என்ற வார்த்தையை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். அது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ஆர்.பி.உதயகுமார் அதற்கு பதிலளிக்காமல் நன்றி வணக்கம் என மூன்று முறை கூறிவிட்டு சென்றுள்ளார். ஏன் ஆர்.பி. சசிகலாவின் ஒற்றுமை குறித்த ட்வீட் க்கு பதிலளிக்காமல் சென்றார் என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் வட்டமடித்து வருகிறது.