தமிழ்நாட்டிற்கு அடித்தளம் அமைத்த நீதிக்கட்சி...107 வது ஆண்டில் அடி...வைகோ கூறும் வரலாறு என்ன!

தமிழ்நாட்டிற்கு அடித்தளம் அமைத்த நீதிக்கட்சி...107 வது ஆண்டில் அடி...வைகோ கூறும் வரலாறு என்ன!
Published on
Updated on
2 min read

107 வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நீதிக்கட்சி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

107 வது ஆண்டு நீதிக்கட்சி:

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் உருவாகி, நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட பேரியக்கம் 1916, நவம்பர், 20ஆம் தேதி தோன்றியது. அதன்படி, நாளை நவம்பர் 20 ஆம் தேதி 2022 அன்று நீதிக்கட்சியின் 107 ஆவது ஆண்டு தொடங்குகிறது. அனைவருக்கும் சம உரிமை, சம நீதி எனும் சமத்துவக் கோட்பாடு நிலைப் பெற தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சியில்தான் வகுப்புரிமை ஆணை  நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. நீதிக்கட்சி அரசால் இந்திய நாட்டிற்கே சமூக நீதி வெளிச்சம் பாய்ச்சியது திராவிட இயக்கம் என்ற பெருமை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னைத் தொடக்கக் கல்விச் சட்டம்:

நீதிக்கட்சி கொண்டுவந்த சென்னைத் தொடக்கக் கல்விச் சட்டம் - 1920, ஆண், பெண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது. பெரும்பாலான அரசுக்  கல்லூரிகளில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலையே இருந்து வந்தது. அரசுப் பணிகளில் மட்டும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குப் பங்களித்தால் போதாது. அரசுப் பணிகளில் நுழையும் தகுதியை உருவாக்கும் கல்வித் துறையிலும் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க குழுக்களை நியமித்தது. அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் குழுக்களை அமைத்து, அதன் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்; கல்லூரித் தலைவர்கள் தங்கள் விருப்பம் போல் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்ற ஆணைக்குப் பின்னர்தான் பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரியில் ஓரளவு இடம் கிடைக்கும் நிலை உருவானதாக குறிப்பிட்டுள்ளார்.

கட்டணமில்லாமல் இலவசக் கல்வி:

தொடர்ந்து, பெண்கள் முன்னேற்றத்திற்காகச் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம் என்றும், பெண்கள் கல்விக்காகப் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியதாகவும், பெண்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு வரை கட்டணமில்லாமல் இலவசக் கல்வி வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், சென்னை மாகாணப் பெண்கள் 1921 முதல் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். அதன்மூலம் இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றது நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்ற சென்னை மாகாணத்தில் தான் என்று கூறியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பணி உயர்வு:

பொதுத்துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டதோடு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பணி உயர்வு மற்றும் உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன. அதேபோன்று, தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள், சாலைகள் அமைத்துத் தரப்பட்டன, அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியும், கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல், நீதிக்கட்சி ஆட்சியில் தான் அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும், தேவதாசி முறை ஒழித்துக்கட்டப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்பொதுப்பணித் தேர்வாணையம்:

1924-இல் தான் பணியாளர் தேர்வு வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல்பொதுப்பணித் தேர்வாணையமாகும். 1924இல், பனகல் அரசர் காலத்தில்தான் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும்,  இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட்டூர் அணைகட்டத் திட்டம் உருவாக்கப்பட்டு, இந்திய மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, மேட்டூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாடு வேளாண்மையில் செழிக்க வழி வகை செய்தது நீதிக்கட்சி அரசு என்று கூறியுள்ளார்.

அடித்தளமே நீதிக்கட்சி அரசு:

இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து ஓங்கி வளர்ந்து இருப்பதற்கு அடித்தளம் அமைத்தது நீதிகட்சி அரசுதான் என்று குறிப்பிட்டுள்ள வைகோ, திராவிட பேரியக்கத்திற்கு அடித்தளம் அமைத்த டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் மற்றும் திராவிட இயக்க மாவீரர்கள் நினைவைப் போற்றுவோம்; சமூக நீதிச்சுடர் அணையாமல் காப்பதற்கு உறுதி ஏற்போம் என தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com