ஓபிஎஸ்க்கு மீண்டும் ஒரு பின்னடைவா...? ஈபிஎஸ் அணிக்கு பறந்த ஆதரவாளர்கள்...!

ஓபிஎஸ்க்கு மீண்டும் ஒரு பின்னடைவா...? ஈபிஎஸ் அணிக்கு பறந்த ஆதரவாளர்கள்...!

 ஓபிஎஸ் ஆதரவாளரான ஈரோடு கிழக்கு தொகுதி மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம் ஈபிஎஸ் அணியில் இணைந்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஈரோடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் ஆதரவாளராக இருக்கும் ஈரோடு தொகுதியின் மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம், ஈபிஎஸ் அணியில் தன்னை இணைத்து கொண்டுள்ளது ஓபிஎஸ் அணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக உட்கட்சி பிரச்சனையில் இரு துருவங்களாக பிரிந்து நிற்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதலில் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி வந்தனர். பின்னர் கட்சி சின்னம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், அவைத்தலைவர் கூறிய ஈபிஎஸ் வேட்பாளர் தென்னரசையே அதிமுக வேட்பாளர் என்று அறிவித்தனர். இருப்பினும் இந்த முடிவு ஓபிஎஸ்க்கு ஒரு பின்னடைவாகவே அனைவராலும் கருதப்பட்டது.

இதையும் படிக்க : இலவச திருமணம்: திட்டச் செலவினத் தொகையை உயர்த்திய தமிழக அரசு...!

இந்நிலையில் சூடுபிடித்துள்ள ஈரோடு கிழக்கு தொகுதி அரசியல் களத்தில், ஓபிஎஸ் ஆதரவாளரும், அத்தொகுதியின் மாநகர மாவட்ட செயலாளருமான முருகானந்தம், இன்று சேலத்தில் உள்ள ஈபிஎஸ் வீட்டிற்கு நேரடியாக சென்று ஈபிஎஸ் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருடன் சேர்ந்து அம்மா பேரவை ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ எல் தங்கராஜ், அதிமுக மருத்துவ அணி செயலாளரும், ஈரோடு மாவட்ட செயலாளருமான டாக்டர் சிவமுருகன், அதிமுக ஈரோடு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ் ராஜமாணிக்கம், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் அர்த்தநாரீஸ்வரர் உள்ளிட்டோர் ஈபிஎஸ் அணியில் தன்னை இணைத்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம், ஈரோடு இடைத்தேர்தலில், வேட்பாளரை அறிவிக்கும் போது தன்னிடம் ஓபிஎஸ் தரப்பு முன்னறிவிப்பு எதுவும் தரவில்லை எனவும், மாவட்டச் செயலாளருக்கு தெரியாமல் வேட்பாளரை அறிவித்தது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும், குறிப்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் அதிமுக அடிப்படை உறுப்பினர் கூட இல்லை எனவும்  முருகானந்தம் குற்றம்சாட்டினார். இதனால் தான் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்துள்ள ஈபிஎஸ் அணியில் இணைந்திருப்பதாகவும் கூறினார்.

ஏற்கனவே, தான் அறிவித்த வேட்பாளரை வாபஸ் பெற்ற போதே பின்னடைவை சந்தித்த ஓபிஎஸ்க்கு, தற்போது தனது ஆதரவாளர்களாக இருந்தவர்கள் அனைவரும் ஈபிஎஸ் அணியில் இணைந்து வருவது ஓபிஎஸ்க்கு மீண்டும் ஒரு பின்னடைவாகவே பார்க்க முடிவதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.