டைரி போல் எழுதுகிறேன்...இந்த டைரியை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் - முதலமைச்சர்!!

டைரி போல் எழுதுகிறேன்...இந்த டைரியை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் - முதலமைச்சர்!!
Published on
Updated on
3 min read

இன்று சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சிங்கப்பூர் - ஜப்பான் பயணம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.


”நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் அயல்நாட்டிலிருந்து எழுதும் அன்பு மடல்” என்று ஆரம்பித்திருக்கும் முதலமைச்சர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போது இரவு 1.30 மணி. இந்திய நேரத்தைவிட ஜப்பான் நேரம் மூன்றரை மணி நேரம் முன்கூட்டியே இருக்கும். அதாவது, உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு இப்போது இரவு 10 மணி. கழகத்தின் சார்பிலான பொதுக்கூட்டங்கள், ஆலோசனைகள், நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்க விழாவை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் கொண்டாடி மகிழ்வதற்கான ஆயத்த வேலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான இயக்கப் பணிகளை முடித்துவிட்டு, குடும்பத்தினர் முகம் கண்டு சற்று மகிழலாம் என்ற நினைப்புடன் வீடு திரும்பிக் கொண்டிருப்பீர்கள்.  உடன்பிறப்புகளாம் உங்கள் முகத்தை நான் நேரில் பார்த்து 9 நாட்களாகிறது. கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பையும் சுமக்கும்படி கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு உழைத்தீர்கள்.  அன்பிற்கினிய தமிழ்நாட்டு மக்களும், நெஞ்சிற்கினிய உடன்பிறப்புகளாகிய நீங்களும் அளித்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டை முன்னேற்றிட எல்லா வகையிலும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

 பத்தாண்டுகால இருட்டை ஒவ்வொரு பகுதியாக விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. இன்னும் சில பகுதிகளில் இருட்டு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதையும் விரட்டி, ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நம் இலக்கு. அதனால்தான் கடந்த இரண்டாண்டுகளில் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள், முதலீடுகள் தொடர்பான நிகழ்வுகளில் அதிகமாகவும் ஆர்வமாகவும் பங்கேற்று வருகிறேன்.  தொழில்வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்புகள் உயர வேண்டும். உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார முன்னேற்றம் காண முடியும். அதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை திராவிட மாடல் அரசிற்கு ஆலோசனை வழங்கும் பொருளாதார வல்லுநர்கள் எடுத்துரைத்திருந்தனர்.

தொழில்துறை அமைச்சராகத் தன் பணியை சிறப்பாக நிறைவேற்றி, நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக ஏற்கனவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டபோது, “அடுத்த முறை உங்கள் மாநில முதலமைச்சரை அழைத்து வாருங்கள்” என அங்குள்ளவர்கள் சொன்னதைத் தெரிவித்து, இந்தப் பயணம் குறித்து வலியுறுத்தியிருந்தார். தொழில்துறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களும் இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார். சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சரும் நண்பருமான திரு.ஈஸ்வரன் ஏற்கனவே எனக்கு அழைப்பு விடுத்திருந்ததும் நினைவுக்கு வந்தது. ஜப்பான் நாட்டுடன் தமிழ்நாட்டுக்கு நல்லுறவு இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். இந்த நிலையில்தான் கடல் கடந்து, சிங்கப்பூர் - ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணச் சிறகுகளை விரித்தேன். 9 நாட்கள் வெளிநாட்டுப் பயணமா, இவ்வளவு நாட்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்ததில்லையே என நான் தயங்கினாலும், இந்தப் பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது என்பதால் பயணச் சிறகுகள் விரிந்தன.

 சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் நாம் நினைத்தபடி, வெற்றிகரமாக பயணம் அமைந்த நிலையில், தாய்மடியாம் தமிழ்நாட்டை நோக்கிப் பயணிக்க ஆயத்தமாகும் சூழலில், உடன்பிறப்புகளிடம் இந்தப் பயணத்தின் நோக்கத்தையும், பயண நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்தவிருக்கும் விளைவுகளையும் விளக்கமாகச் சொல்லிட வேண்டும் என்கிற என் மனதின் விருப்பமே இந்தக் கடிதம். ஒரு டைரி போல இதனை எழுதுகிறேன்.

அடுத்தவர் டைரியைப் படிக்கலாமா என்ற தயக்கம் தேவையில்லை. நாம் யாரும் அடுத்தவர்களல்ல. கழகம் எனும் கொள்கைக் குடும்பத்தில் எல்லாரும் கலைஞரின் உடன்பிறப்புகள். அதனால் பயணத்தின் நாட்குறிப்பை உங்களிடம் பதிவிடுகிறேன்.

 மே 23-செவ்வாய் :

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்படும் முன் செய்தியாளர்களைச் சந்தித்தேன். இந்தப் பயணத்தின் மூலமாக எவ்வளவு முதலீடு கிடைக்கும் என்ற கேள்வி அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. “எவ்வளவு முதலீடு என்பதைவிட, 2024 ஜனவரியில் சென்னையில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சிங்கப்பூர் - ஜப்பான் நாட்டின் நிறுவனங்களை அழைப்பதுதான் பயணத்தின் முதன்மையான நோக்கம்” என்பதைத் தெரிவித்தேன். கடந்த ஆண்டு துபாய்க்குப் பயணம் செய்தபோது, ஒப்பந்தமான முதலீடுகள் எந்தளவு வந்திருக்கிறது என்ற கேள்வியையும் செய்தியாளர்கள் கேட்டபோது, எந்தெந்த நிறுவனங்களிலிருந்து எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்ற விவரத்தையும் ஆதாரத்துடன் அவர்களிடம் தெரிவித்தேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பினார்கள் செய்தியாளர்கள். விமான நிலையம் வரை வந்திருந்த மாண்புமிகு அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரிடமும் அன்புடன் விடைபெற்றேன். இயந்திரப் பறவை எனப்படும் விமானம் தன் சிறகுகளை விரித்துப் பறக்கத் தொடங்கியது.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம். நம்மைவிட முன்கூட்டியே அவர்களுக்கு நேரம் ஓடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் சிங்கப்பூரில் தரையிறங்கினேன். சிங்கப்பூர் நேரம், இரவு 7 மணி. சிங்கப்பூர் பயணத்தில் என்னுடன் தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு - வணிகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் உடனிருந்தனர். எனக்கான உணவு, என் உடல்நலன் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளும் பொருட்டு என் துணைவியாரும் உடன்வந்தார்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியத் தூதர் திரு.குமரன் அவர்கள் வரவேற்றார். திருமதி.அமுதா ஐ.ஏ.எஸ். அவர்களின் சகோதரர். நல்வரவேற்புடன், நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலுக்குப் புறப்பட்டோம். இரவு நேரமானபோதும், சிங்கப்பூர் வாழ் தமிழ்ச் சொந்தங்கள் ஹோட்டல் வரவேற்பரங்கில் காத்திருந்து, அன்பைப் பொழிந்து வரவேற்பளித்தனர். டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த சுதர்சன் சீனிவாசன் அவர்களும் வரவேற்றார். ஹோட்டல் அறைக்குச் சென்ற பிறகும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சிங்கப்பூர் பயணத் திட்டம் குறித்த ஆலோசனைகள் நீடித்தன. சிங்கப்பூரில் நம் வீட்டு சமையல் போன்ற உணவை அருமை நண்பர் சிங்கப்பூர் ராம் தனது இல்லத்திலிருந்து கொண்டு வந்து பரிமாறினார். அதில் அன்பும் சுவையும் மிகுந்திருந்தது. 

கடிதம் தொடரும்....

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com