கருமேகங்கள் சூழ்ந்து வெளுத்து வாங்கிய கனமழை...மகிழ்ச்சியில் மக்கள்!

கருமேகங்கள் சூழ்ந்து வெளுத்து வாங்கிய கனமழை...மகிழ்ச்சியில் மக்கள்!

கத்திரி வெயில் முடிந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் திருவள்ளூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில், கருமேகங்கள் சூழ்ந்து, புழுதியுடன் கூடிய பலத்த சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதையடுத்து பெய்த மிதமான மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திம்மாவரம், ஆத்தூர், புலிப்பாக்கம், காந்தலூர், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை  பெய்தது. பகலில் வெயில் வாட்டிய நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டிணம், குந்தாரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து  இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.  இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க : சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை, ராயபுரம், குமார் நகர், வெள்ளியங்காடு, பெரிச்சிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. பல்லடம் முக்கிய சாலையில் மதுபானம் ஏற்றி வந்த வேன் மீது மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரட்டாங்காடு பகுதியில் வணிக வளாக மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் முறிந்து விழுந்தது. பெரிச்சிபாளையம் மாசானி அம்மன் கோயிலில் 30 ஆண்டுகள் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டது. 

சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மேட்டூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், மாலையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமாா் ஒன்றரை மணி நேரம் கொட்டித்தீா்த்த இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.