”தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை, சென்னையை மிகவும் நேசிக்கிறேன்” - பிரதமர் மோடி பேச்சு!

”தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை, சென்னையை மிகவும் நேசிக்கிறேன்” - பிரதமர் மோடி பேச்சு!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

சென்னை - கோவை இடையேயான ‘வந்தே பாரத் ரயில்’ சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் சென்றடைந்தார். அப்போது வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் விவேகானந்தர் இல்லத்தில் உள்ள விவேகானந்தர் திருவுருவ சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, விவேகானந்தரின் முழு உருவ சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : விவேகானந்தர் இல்லம் சென்றார் பிரதமர் மோடி...!

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, ``தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை, சென்னையின் உத்வேகத்தை மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்தில் ஒரு கதாநாயகன் போல வரவேற்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் இங்கு தியானத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறினார். மேலும், காசிக்கும் தமிழகத்துக்கும் இடையேயான உள்ள பிணைப்பை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நமக்கு உணர்த்தியதாக தெரிவித்தவர், அதேபோல் செளராஷ்டிரா தமிழ் சங்கமமும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து திருக்குறளை சொல்ல தவறாத பிரதமர், இந்த முறை அதிகாரம் ஒப்புரவறிதல், குறள் 213 ல் உள்ள “புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற” என்ற திருக்குறளை கூறினார்.