இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை...உடனடியாக நிறைவேற்ற வேண்டும்...கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை!

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை...உடனடியாக நிறைவேற்ற வேண்டும்...கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை!

’சம வேலைக்கு சம ஊதியம்' கோரி உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என  தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

தி முகவின் வாக்குறுதி:

’சம வேலைக்கு சம ஊதியம்' தொடர்பாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த  அறிக்கையில், தி. மு.க.வின் தேர்தல் அறிக்கை பக்கம் 83, வரிசை எண் 311-ல் "ரூ.8000/- அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி. மு.க. ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கழக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் கால முறை ஊதியம் வழங்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும்:

ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற தி. மு.க. அரசு முன்வராத நிலையில், இதனை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டாலும், ஓர் அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்பதே இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. 
இதற்குக்கூட செவிமடுக்க தி. மு.க. அரசு தயாராக இல்லை. 

தி முக அரசின் இரட்டை நிலைப்பாடு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், 2009 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டபோது, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தை பொறுத்தவரையில், 1-6-2009-க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும், 1-6-2009 அன்று மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும் அப்போதிருந்த தி. மு.க. அரசு நிர்ணயம் செய்தது. தி. மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த இரட்டை நிலைப்பாடுதான் தற்போதைய ஊதிய வித்தியாசத்திற்குக் காரணம். இந்த ஊதிய வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டதே தி. மு.க. ஆட்சியில்தான்; இதற்கு மூல காரணமே தி. மு.க.தான் என்பதை மறைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஏற்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை தி. மு.க. தனது அறிக்கையில் உருவாக்கி உள்ளது. ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் தி. மு.க. செய்யும் என்பதை தி. மு.க. அரசின் நடவடிக்கைகளிலிருந்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: மக்களே உஷார்...தமிழகத்தில் வருகிற 3 முதல் 5 வரை...மழைக்கு வாய்ப்பு...!

கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்:

2018 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது அதற்கு ஆதரவு தெரிவித்ததுடன், இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின். இப்போது அவரே முதலமைச்சராக பொறுப்பேற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்? தி. மு.க.வினுடைய இரட்டை நிலைப்பாட்டால் 2009 ஆம் ஆண்டு 3,000 ரூபாய் அளவுக்கு இருந்த ஊதிய முரண்பாடு தற்போது 20,000 ரூபாய் அளவுக்கு சென்றிருக்கிறது. தி. மு.க.வால் ஏற்பட்ட முரண்பாட்டை களைய ஆட்சிக்கு வந்த உடனேயே தி. மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. இப்போது பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ள நிலையில் கூட ஊதிய முரண்பாட்டை களைவதற்கான ஆணையையோ, அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் அதைக் களைவதற்கான ஓர் அறிவிப்பையோகூட முதலமைச்சர் வெளியிடாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஊதிய முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்:

இடைநிலை ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதன்மூலம் அரசுக்கு 400 கோடி ரூபாய் அளவுக்குதான் கூடுதல் செலவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இரண்டு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் தமிழ்நாடு அரசிற்கு இது ஒன்றும் பெரிய தொகை அல்ல. இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பாததன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு அரசால் வருவாய் மிச்சப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் அரசுக்கு பெரிய சிரமம் இருக்காது. இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், முந்தைய தி. மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டினை களையும் வகையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.