நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்குத் தேவையான ஊக்கத்தை வழங்க தனது ஆட்சி தீவிரமாக முயற்சிப்பதால், பணப் பற்றாக்குறை உள்ள இலங்கைக்கு 2023 ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தின் மிகவும் கடினமான காலங்கள், பெரிய கஷ்டங்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகள் அதனுடன் பல ஏமாற்றங்களையும் கடந்து 2023 புத்தாண்டை புது நம்பிக்கையோடு எதிர்நோக்குகிறோம் என விக்ரமசிங்க அவரது புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளார்.
மேலும் நம் அனைவரின் மீதும் எவ்வளவு பெரிய சுமை சுமத்தப்பட்டுள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன் என்றும், நாட்டின் பரிதாபகரமான பொருளாதார வீழ்ச்சியால் நம்மில் பெரும்பாலோர் சந்தித்த அதிர்ச்சிகள் மிகவும் சவாலானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய விக்ரமசிங்க 2023ல் பொருளாதாரத்தை முழுமையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் எனவும் அடிமட்டத்தில் இருந்து ஒவ்வொரு படியாக முன்னேற பணியாற்றுவேன் எனவும் வாக்களித்துள்ளார். அதே நேரத்தில், உலக அளவில் உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் இனிவரும் காலங்களில் இலங்கையை வளமான மற்றும் உற்பத்திமிக்க நாடாக மாற்ற சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் துணிச்சலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
நாட்டின் மிக மோசமான நிதி நெருக்கடியை நாம் ஒற்றுமையாக போராடினால் முடிவுக்கு கொண்டு வர முடியும் மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளார் இலங்கை அதிபர்.
-நப்பசலையார்