ஆத்தூர் - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன் ஆத்தூர் - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த அரசு முன்வருமா எனவும், ஆத்தூர் உள்வட்ட சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆத்தூர்- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி நான்கு வழிசாலை அமைக்கும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், நான்கு வழி சாலை அமைப்பதற்கான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்ட பின்பே ஆத்தூர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், ஆத்தூர் உள்வட்ட சாலை அமைக்க 11 கி.மீ நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக கூறிய அவர், நான்கு வழி சாலை பணிக்கு பிறகு உள்வட்ட சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்வது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிதிநிலைக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.