பட்டியலின மக்கள் பெறும் உரிமைகள் - சலுகைகள், கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களும் பெறும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
இன்றைய சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து உரையாற்றினார். இது குறித்து விளக்கமளித்த அவர், சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இடஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம் தான் சமூகநீதி தத்துவம்; சமூக நீதி தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாக பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்து மதத்திலிருந்து வேறு மதம் மாறுபவர்கள் அட்டவணை சாதியின் உறுப்பினர்களாக ஆக முடியாது ; ஆனால் 1956 ஆம் ஆண்டு சீக்கிய மதத்தை பின்பற்றுவர்களையும், 1990ம் ஆண்டு பெளத்த மதத்தை பின்பற்றுவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டது. அதே போல் கிறித்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களும் சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, பட்டியலின மக்கள் பெறும் உரிமைகள் மற்றும் சலுகைகளை, கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களும் பெறும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தனி தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வானதி சீனிவாசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். அதேபோல், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சரின் தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பட்டியலின மக்கள் பெறும் உரிமைகள் - சலுகைகள், கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களும் பெறும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனி தீர்மானம் ஒரு மனதாக அவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
முன்னதாக, மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பான வழக்குகள் 2004 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் மாதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கு சலுகைகள் வழங்குமாறு ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்தது. இதனை ஏற்க மறுத்த மத்திய அரசு மற்றொரு குழுவை அமைத்துள்ளது. எனினும், புதிய குழுவின் பரிந்துரைக்கு காத்திருக்காமல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்து அதனை ஒருமனதாக நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.