குடியரசுத் தலைவர் வருகை; ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

குடியரசுத் தலைவர் வருகை; ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!
Published on
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகையையொட்டி ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஐந்தாம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆஸ்கர் விருது பெற்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி மற்றும் பழங்குடியின மக்களை நேரில் சந்திக்க முதுமலைக்கு வருகை புரிய உள்ளதால்  பாதுகாப்பு மற்றும் பல்வேறு பணிகளுக்காக முதுமலை யானை முகாம் இன்று முதல் வரும் ஐந்தாம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ரகு, பொம்மி ஆகிய இரு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்த நிகழ்வை மையமாக வைத்து 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து அப்படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து குட்டி யானைகளுடன் நடித்த பொம்மன், பெள்ளி சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி முதுமலைக்கு வருகை புரிந்து 2 பேரையும் பாராட்டினார். தொடர்ந்து நாடு முழுவதும் பொம்மன், பெள்ளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி இந்திய நாட்டின் ஜனாதிபதி திரெளபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பொம்மன், பெள்ளி சந்தித்து பாராட்டுகள் பெற்றனர்.

இதனிடையே ஆகஸ்ட்  5ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வர இருக்கிறார். இதற்காக அன்றைய தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு பகல் 2.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு 3.45 மணிக்கு ஜனாதிபதி வருகிறார். தொடர்ந்து முதுமலையில் உள்ள பொம்மன், பெள்ளி மற்றும் பழங்குடியின மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்ந்து வளர்ப்பு யானைகளை பார்வையிட இருக்கும் பின்னர் மசினகுடிக்கு சென்று ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மைசூருக்கு செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இதனிடையே ஜனாதிபதி வருகையை ஒட்டி முதுமலை யானைகள் முகாமில் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பணிகளுக்காக முதுமலை யானை முகாமில் இன்று முதல் வரும் ஐந்தாம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு பகுதி முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com