வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகு அனைத்து கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை அறிவித்ததோடு, வேட்பு மனுவையும் தாக்கல் செய்து வந்தனர். அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று தெரிவித்த அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன், வேட்பாளராக சிவபிரசாந்த் என்பவரையும் அறிவித்தார்.
தொடர்ந்து, தேர்தலுக்கான வேட்புமனு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ஆரம்பமான நிலையில், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஆனால், வேட்புமனு தாக்கல் செய்த நான்கு ஐந்து நாட்களிலேயே அமமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இடைத்தேர்தலில் தங்கள் சின்னமான குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை என்பதால் மீண்டும் வேறொரு சின்னத்தில் நின்று போட்டியிட முடியாது, அது வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை பாதிக்கும் என்பதால் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை எனவும், தேர்தலில் போட்டியிடாததற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்காதது தான் காரணம் என்பதையும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பதால் அதன் செல்வாக்கு இழந்து வருவதாக குற்றம் சாட்டினார்.