திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 20 லட்சம் ரூபாயையும், தேனி மலைப்பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் 31 லட்சம் ரூபாயையும், போளூர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில்19 லட்சம் ரூபாயையும், கலசபாக்கத்திலுள்ள ஏடிஎம் மையத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க தனிப்படையினர் ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க : ஒரே நாளில் 4 ஏடிஎம் மையங்களில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்...!
இதற்கிடையே, கொள்ளை நடந்த ஏடிஎம் மையங்களில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், ஏடிஎம் இயந்திரத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களே கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஏடிஎம் இயந்திரத்தை கையாளத் தெரிந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் கூறினார்.
ஒரே நாளில் நான்கு ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.