பல நாடுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழர்கள் திகழ்வதாக, அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அயலகத் தமிழர் தின விழா:
சென்னை கலைவாணர் அரங்கில் அயலகத் தமிழர் தின விழா நடைபெற்றது. 2 ஆம் நாளாக நடைபெற்ற இவ்விழாவில் அயலக தமிழர்களுக்கான புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ் நம்மை இணைக்கும் :
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், உழைப்பால் தங்களை மட்டுமின்றி தங்களது நாட்டையும் உயர்த்திக் காட்டியவர்கள் தமிழர்கள் தான் என்றும், அயலகத் தமிழர்களின் ஆற்றலும், ஆராய்ச்சித் திறனும் தனிப்பெரும் வரலாறாக உருவாகி வருவதாகவும், கடலும் கண்டங்களும் நம்மை பிரித்து வைத்திருந்தாலும் தமிழ் நம்மை இணைக்கும் என்றும் தெரிவித்தார்.
மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் :
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து விரிவான தகவல்கள் ஆவணப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகளில் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்படுவார்கள் எனவும், அயல்நாடுகளில் பணிக்குச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழப்போர் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், அயல்நாடுவாழ் தமிழர்கள் தொடர்பாக தரவு தளம் உருவாக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.