தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஏரளாமானோர் குவிந்தனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 20 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நாளன்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு கூட்டத்தை கூட்டி மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்.
இதேப்போன்று நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடலில் ஜாக்டோ ஜியோ சார்பில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்றும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேப்போல், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைதொடர்ந்து ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை, முதலமைச்சர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், புதிதாக எதையும் தாங்கள் கேட்கவில்லை என்றும் கூறினர்.