முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சியை நிர்வகிக்கும் திறமை இல்லை. மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் ராஜன் செல்லப்பா தாக்கி பேசியுள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய செல்லப்பா, ”ஆட்சியை நிர்வகிக்கும் திறமை முதல்வருக்கு இல்லை. மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்போது பேசிய அவர் கோவை சம்பவத்தை குறிப்பிட்டு, “இந்த சம்பவத்திற்கு பிறகு மத்திய அரசிடம் என்ஐஏ விசாரணையை முதல்வர் கோரினார். ஆனால் அவரது பரிந்துரைக்கு முன்பே என்ஐஏ இங்கு வந்து விசாரணையை தொடங்கிவிட்டது.” எனத் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர் தனியார் நிறுவன் செய்தி ஊடகவியலாளர் ஒருவர் மழை நீரில் வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதைக் குறிப்பிட்டு பேசிய செல்லப்பா, “மழைக்காலம் வந்துவிட்டது. இதுபோன்ற இடங்களை பாதுகாக்க வேண்டும் என்பது அரசுக்கு தெரியாதா? முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலத்தில் இதுபோன்ற எத்தனை விபத்துகள் நடந்துள்ளன.” எனக் கேள்வியெழுப்பியுள்ளார் செல்லப்பா.