அரசு மருத்துவர்கள் வருகிற மே 29ஆம் தேதி முதல் போராட்டம்...!

அரசு மருத்துவர்கள் வருகிற மே 29ஆம் தேதி முதல் போராட்டம்...!
Published on
Updated on
1 min read

தமிழக அரசு அரசாணை 293 ஐ நடைமுறை படுத்தவும், மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் மே 29 முதல் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

மதுரையில் அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் 2017 ல் இருந்து ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்காக போராடி வருகிறது. அதிமுக ஆட்சியில் பல கட்ட போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. 

2021 ஜூன் 18 ல் முதல்வர் அரசு மருத்துவர்களுக்காக அரசாணை 293 ஐ வழங்கினார். ஆனால்  அரசாணையால் தங்களுக்கு பயன் இல்லை என சில மருத்துவர்கள் எதிர்த்தார்கள்கள். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி அரசாணை 293 ஐ மட்டுமே செயல்படுத்த முடியும் என தெரிவித்திருந்தார். விருப்பத்தின் பேரில் அரசாணை 293 ஐ அமுல்படுத்தலாம் என அமைச்சர் கூறினார். ஆனால் தற்போது வரை அரசாணை நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே தமிழக முதல்வர் தலையிட்டு அரசாணை 293 ஐ உடனடியாக அமுல்படுத்த வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் 2,600 பேராசிரியர்களில் 1,000 பேராசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 450 பேராசிரியர்கள், 550 இணை பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மே 29 முதல் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவர் இதுவரை நோயாளிகள் பாதிக்காத வண்ணம் போராட்டங்கள் நடத்தி உள்ளோம் என்றும் தற்போது தமிழக அரசு நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகும் படி போராட்டம் நடத்தும் நிலைக்கு தங்களை தள்ளி உள்ளது எனவும் கூறியுள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com