சென்னை நுங்கம்பாக்கத்தில் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றித சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமன போட்டித் தேர்விலிருந்து விலக்கு அளித்து நேரடியாக பணி நியமனம் செய்ய வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஐந்தாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் 2013 ம் ஆண்டு நடைபெற்ற (TET)ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாரக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு திமுக அரசு நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் அரசாணை 149ஐ ரத்து செய்து பணியமனம் பெற அதிகபட்ச வயது வரம்பு 57 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று வரை 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமுற்று சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதி எண் 177 ல் கூறியுள்ளபடியும் பணியமனம் வழங்க வேண்டும் என்றும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து பேசி இருந்தாலும் கூட அவர்களின் பேச்சில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால் உடனடியாக தமிழக முதலமைச்சர் ஆசிரியர்களின் போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் அதுவரை தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கின்றனர்.