காட்டுயானையை மிரட்டும் வகையில் வீடியோ எடுத்து வெளியிட்ட நபருக்கு 10 ஆயிரம் அபராதம் பென்னாகரம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. கோடை காலம் என்பதால் இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காலை மாலை நேரங்களில் சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி சாலை கடப்பதற்காக ஒரு காட்டு யானை நின்றுகொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த ஒருவர் யானையை தனது சக்தியால் விரட்டுவதாக கூறி அதன் அருகில் சென்றுள்ளார். பின்னர் அந்த யானையை நோக்கி வணங்கிய அவர் பின்னர் யானையை அச்சுறுத்தும் வகையில் கையை உயர்த்தி சேட்டை செய்ய தொடங்கினார். இவற்றை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் வைரல் ஆனது.
இந்த நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் யானையை வீடியோ எடுத்து வெளியிட்டவர் பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேக்லாம்திட்டை சேர்ந்த குள்ளையன் மகன் முருகேசன் என தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் வழக்கு பதிவு செய்து வீடியோ எடுத்து வெளியிட்ட முருகேசனுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் தற்பொழுது ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காப்புக்காட்டில் உள்ளே நுழைந்து புகைப்படம் மற்றும் செல்பி வீடியோ எடுக்கக் கூடாது என்றும் மீறினால் வனச் சட்டத்தின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர்.