மணிப்பூர் விவகாரம்: "கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி" சீமான் காட்டம்!

மணிப்பூர் விவகாரம்: "கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி" சீமான் காட்டம்!
Published on
Updated on
1 min read

இந்தியாவில் மத, சாதி பாகுபாடுகள் இல்லையென்று கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி இப்போது வாய் திறப்பாரா?என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

80 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் கலவரம் நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் பெரும்பான்மை மக்களான மைத்தேயி சமூகத்தினர் தங்களுக்கும் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டது முதல் அம்மாநிலமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் நேற்று வெளியான காணொளி ஒன்றில் குக்கி பழங்குடி இனப் பெண்கள் இருவரை மைத்தேயி சமூகத்தை சேர்ந்த பலர் சாலையில் நிர்வாணமாக்கி தாக்கி கொண்டே இழத்துச்சென்றதும் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் கலவரம் தொடங்கிய காலகட்டத்தில் (மே 4) எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

அவ்வறிக்கையில், பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் இருவர் பெரும்பன்மை மைத்தேயி சமூகத்தை சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ள அவர், ஒரு பழங்குடி பெண்ணை இந்தியாவின் குடியரசு தலைவராக ஆக்கிவிட்டதாக பெருமை பேசிய பாஜக இரண்டு பழங்குடி பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ள மனச்சான்றற்ற அநீதிக்கு என்ன பதில் கூறப்போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்முன்னே சக மனிதர்களுக்கு நிகழ்த்தப்படும் சிறிதும் மனித தன்மையற்ற இதுபோன்ற கொடுமைகளை அனுமதித்துவிட்டு, நிலவிற்கு செயற்கோள் அனுப்பியதை அறிவியல் வளர்ச்சி என்று இந்த நாகரீக நாடு கொண்டாடுவது வெட்கக்கேடானது என சாடியுள்ள அவர், இதுதான் மோடி கண்டுபிடித்த புதிய இந்தியாவா? எனவும் இந்தியாவில் மத, சாதி பாகுபாடுகள் இல்லையென்று கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி இப்போது வாய் திறப்பாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மல்யுத்த வீராங்கனைகள் முதல் பழங்குடியின பெண்கள் வரை பாஜக ஆட்சியில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது எனவும்  பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பாஜக ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான் எனவும் கூறியுள்ளார்.

பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டுக்கடங்காத கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com