மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு மூலம் வரும் வருமானத்தை மட்டுமே பார்க்கிறது, மக்களின் உயிரிழப்பு குறித்து கவலைப்படுவதில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமானது. இச்சட்டத்தின் படி தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை விளையாடுவதும் அவற்றிற்கு விளம்பரம் செய்வதும் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் அதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு நேற்று தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ ஆர் எல் சுந்தரேசன், "ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்து சட்டமியற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை" என வாதிட்டார்.
இதனையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வாதம் குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் மாநில அரசின் உரிமையில் தான் ஆன்லைன் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆன்லைன் விளையாட்டின் ஜி.எஸ்.டி வரியால் அரசுக்கு வரும் பாவப்பட்ட வருமானம் எங்களுக்கு தேவையில்லை என கூறிய அவர், மத்திய அரசு இந்த விளையாட்டு மூலம் வரும் வருமானத்தை மட்டுமே பார்க்கிறது மக்களின் உயிரிழப்பு குறித்து கவலைப்படுவதில்லை எனவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.
மேலும் வரும் 1ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது வலுவான வாதங்களை தமிழக அரசு முன் வைக்கும் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதையும் படிக்க:களவாளடப்பட்ட காவல் தெய்வத்தின் சிலை!